கலைஞர் பிறந்தநாளில்… “விக்ரம்” ஐ கொண்டாடும் உதயநிதி
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியன்று உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும்”விக்ரம்” திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் அனைத்து மாநிலங்களிலும் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்திற்கான விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கமல்ஹாசனும் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன் பேசுகையில்… “விக்ரம்” படத்தை லோகேஷ் கனகராஜ் என்னும் புதிய இயக்குனர் இயக்கியிருக்கிறார். பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜா எப்படி புதிய இயக்குனரோ அதேபோல் தான் லோகேஷ் கனகராஜும் எனக்கு புதியவர். அன்றும் இன்றும் நான் இளைஞர்களுடன் பணியாற்றுபவன். இன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என இந்தப் படத்தில் முயற்சித்திருக்கிறோம். ஒரு சினிமாக்காரனாக கலைஞரைப் பற்றி பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. சினிமாத்துறையில் கலைஞர் எண்ணற்ற சாதனைகள் செய்திருக்கிறார். அவரது பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாவது எதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
மேலும் பேசுகையில் இந்தப் படத்தில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றும் “டைமண்ட் பாபு” விற்கு இது 600 வது படம் என்று கூறியதோடு அவரை மேடைக்கு அழைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கௌரவப் படுத்தினார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் சூர்யா கொளரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.