பல்லடம் அருகே டெண்டரே இல்லாமல் ஸ்டண்ட் அடித்த எம்.எல்.ஏ ஆனந்தன்
பூகம்பத்தை கிளப்பிய பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கே.கிருஷ்ணாபுரம். பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஊராட்சியில் தான் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வான அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் டெண்டரே விடப்படாத பணிக்கு பூமி பூஜை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கே.கிருஷ்ணாபுரம் ஊராசிக்குட்பட்ட காமநாயக்கன்பாளையத்தில் 150 மீட்டர் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்க பல்லடம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய். 5 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியானது. ஒப்பந்தப்புள்ளி படிவங்களை ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தான் விநியோகப்படுவதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும் ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுவதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்ததாரர் கூடுதல் வைப்புத்தொகை 1 சதவிகிதத்தை ஊராட்சி ஒன்றிய கருவூலத்தில் ரொக்கமாக செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்படிருந்தது. ஆனால் ஒப்பந்ததாரரே முடிவாகாமல் காமநாயக்கன்பாளையத்தில் மார்ச் 17 ஆம் தேதி எம்.எல்.ஏ. ஆனந்தன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜை அன்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்பேனரை பார்த்த பொதுமக்கள் மற்றும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளக்ஸ் பேனரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் படம் மட்டுமே இருந்ததால் குழப்பமடைய வைத்தது. மேலும் அரசு திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடைபெறும் நிகழ்வில் அரசு அதிகாரிகள் இல்லாமலே நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் கட்சி விழா போன்று நடத்துவதாக காமநாயக்கன்பாளைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் பிளக்ஸ் பேனரை அகற்ற கூறினர்.
இதனை கேட்டு டெரரான எம்.எல்.ஏ ஆனந்தன் வேண்டுமானால் தன்னை கைது செய்யுங்கள் என கூறியதோடு பிளஸ் பேனரை அகற்றாமல் சொற்ப கட்சியினரை வைத்து டெண்டர் இல்லாமல் ஸ்டண்ட் அடித்து விட்டு சென்றுவிட்டார். முன்னாள் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் நடத்திய பூமி பூஜை தற்போது பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி. செல்வராஜ், அரசு விழாவை கட்சி விழா போன்று நடத்தியதற்கு கண்டனத்தை தெரிவித்தார். மேலும் டெண்டரே இல்லாமல் ஒப்பந்ததாரரை முடிவு செய்யாமல் பூமி பூஜை நடத்தியது அரசியலில் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மேலும் ஆட்சி மாறியதே தெரியாமல் முன்னாள் முதலமைச்சர்கள் படத்தை வைத்து அரசு விழாவை கட்சி விழாவாக நடத்திக்காட்டியது கேலிக்கூத்தாக உள்ளதாகவும், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே செல்லாத எம்.எல்.ஏ ஆனந்தனை எந்த விழாவிற்கும் அழைக்க மக்கள் தயாராக இல்லை என்பதை காட்டுவதாகவும், முதலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்திருக்கும் இடமாவது நினைவு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
டெண்டரே இல்லாமல் ஸ்டண்ட் அடித்த பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ ஆனந்தன் கொஞ்சம் தொகுதிப்பக்கம் வந்திட்டு போவாரா?