பல்லடத்தில் ஆபத்தான நிலையில் சிவில் சப்ளை கார்ப்பரேசன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமுதம் மண்ணென்னை வழங்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. பொங்கலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி சொசைட்டிகளுக்கு வழங்கப்படும் மண்ணென்னை இங்கு மொத்தமாக லாரியில் கொண்டு வந்து சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்பட்டு பின்னர் சில்லரையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலையத்தில் விற்பனையாளர் மற்றும் கணக்காளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
ஆனால் இன்று ஆபத்தான நிலையில் பராமரிப்பின்றி பழைய இரும்பு, ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் கூட கிடைக்காது என்ற நிலையில் இருக்கிறது. இது போன்று எளிதில் தீப்பற்ற கூடிய சேமிப்பு கிடங்கில் பராமரிப்பில்லாத சூழலில் குடியிருப்பு பகுதியில் கிடங்கு அமைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருப்பிடித்த பெரிய டேங்க் பயன்பாடில்லாமல் கிடங்கில் வைக்கப்படிருக்கிறது. மேலும் எளிதில் தீபற்றி எரிய கூடிய பெட்ரோல் பங்குகளில் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின் பற்றக்கூடிய சூழலில் தமிழக அரசின் சிவில் சப்ளை கார்பரேசன் கட்டுப்பாடில் உள்ள இக்கிடங்கு எந்த வித பாதுகாப்பு அம்சங்களையும் கடை பிடிக்காமல் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு பயன்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய மண்ணென்னையை சேமித்து வைக்கப்படும் கிடங்கு எந்த வித பாதுகாப்புமின்றி செயல்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் நேற்று இந்த மண்ணென்னை சேமிப்பு கிடங்கின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க கணக்காளர் வெங்கடேசனிடம் ரூபாய் 2400 லஞ்சம் கேட்டதாக வட்ட வழங்கல் பெண் அதிகாரி கிருஷ்ணவேனி மற்றும் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் புரோக்கர் ஜெகநாதன் ஆகிய மூவரும் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவில் சப்ளை கார்பரேசன் அதிகாரிகள் ஏன் பல ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள இந்த விற்பனை நிலையத்தை புணரமைக்காமல் இருப்பதன் ரகசியம் என்ன என்பது கேள்விகுறியாக உள்ளது. மேலும் அப்பட்டமாக துருப்பிடித்த இந்த மண்ணென்னை சேமிப்பு கிடங்கை புதுப்பித்து காயலான் கடைக்கு பழைய இரும்பாக செல்லாமல் தடுத்து நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.