பட்ஜெட் 15 கோடி ரூபாய்.. காணாமல் போன 9 கோடி ரூபாய்…

ராவண கோட்டம் திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து தற்போது திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வந்த சுவடே தெரியாமல் காணாமலும் போனது. இந்தப் படத்திற்கான பட்ஜெட் 15 கோடி கொடுத்துள்ளாராம் கண்ணன் ரவி. பண வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் நடிகர் பாக்கியராஜ் குடும்பமே கையாண்டுள்ளனர்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தினார் தயாரிப்பாளர். அந்த விழாவிற்கு பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் அன அழைத்துச் சென்ற வகையில் மூன்றரைக் கோடி செலவு செய்துள்ளார்களாம். இதற்கான அனைத்து பணிகளையும் தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் சுப்பு பஞ்சு இருவரும் செய்துள்ளனர். அதன்பிறகு படத்தைப் பற்றிய செய்திகளை பாராட்டி எழுதுமாறு பத்திரிகையாளர்களுக்கு தலா 15 ஆயிரம் கவரும் கொடுத்துள்ளனர். துபாய் பயணம், பத்திரிகையாளர்களுக்கு கவர் கொடுத்ததில் டி.சிவாவும், சுப்பு பஞ்சுவும் தவறான கணக்குகளை காண்பித்ததால் இருவரையும் கலட்டி விட்டிருக்கிறார் பாக்கியராஜின் மகன் சாந்தனு. அதன்பிறகு படவெளியீட்டிற்கான பணிகள் அனைத்தையும் சாந்தனுவே மேற்கொண்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தனு படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த வாய்ப்பையாவது தக்க வைத்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் நடிகர் பாக்கியராஜ் குடும்பமே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என முழுமுனைப்புடன் வேலை செய்தனர். அதனால்தான் பத்திரிகையாளர்களை துபாய்க்கு அழைத்துச் சென்றனர். 15 ஆயிரம் பணமும் கொடுத்தனர். அடுத்தவர் பணத்தை வாரி இரைத்தும் சரியான கதை இல்லாததால் தியேட்டருக்கு ஆட்கள் வருகை குறைவானது.
இயக்குனரின் சொந்தக்கதையை குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றில் திணக்கப் பார்த்ததும் இந்தப் படத்திற்கான தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு 15 கோடி செலவு செய்தீர்களா என சாந்தனுவிடம் கேட்டபோது 6 கோடி என பதட்டத்துடன் கூறுகிறார். ஆனால் தயாரிப்பாளர் கொடுத்த 15 கோடியில் மீதம் 9 கோடி எங்கே போனது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. பத்துவருடங்கள் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த சாந்தனு வருடத்திற்கு 1 கோடி என சம்பளமாக எடுத்துக் கொண்டாரோ எனவும் கூறுகிறார்கள்.
இதே தயாரிப்பாளர் திண்டுக்கல் லியோனியின் மகனை வைத்து படம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் இழந்தது போல் அடுத்து தயாரிக்கும் படத்திலாவது தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெளிவாக இருக்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
– குண்டூசி