திறந்து ஐந்து ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்கிப்பாளையம் ஊராட்சி காரணம்பேட்டையில் ரூ 178.24 லட்சங்கள் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 16.06.2015 ஆம் ஆண்டு திறந்து வைத்தார். கோயம்புத்தூர் பல்லடம் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், விசாலமான இடவசதியுடன் இந்த பேருந்துநிலையம் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா திறந்து வைத்ததில் இருந்து இன்று வரை கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பேருந்துநிலையம் பயன்படுத்தப்படாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக பயன்படுத்தி வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
கோயம்புத்தூர் – பல்லடம் நெடுஞ்சாலையில் கடை வைத்திருப்பவர்கள் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதிகாரிகளை சரிசெய்து இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த விடாமல் தடுத்து வைத்திருப்பதாகவும், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தாதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்களின் கூடாரமாக இந்த பேருந்து நிலையம் பயன்படுத்தப்படுகிறது. சட்டவிரோதமாக கஞ்சா, மது விற்பனை செய்யப்படுகிறதாம். விபச்சாரத்திற்கும் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேருந்துநிலையம் பயன்படுத்தப்படாததால் மழை, வெயில் காலங்களில் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க இடமின்றி அவஸ்தைப்படுகிறார்கள். பொதுமக்களின் நலனில் அக்கரை காட்டாத அரசு அதிகாரிகளின் செயலைக் கண்டித்து இப்பகுதி மக்கள் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.
மக்களின் வரிப்பணத்தில் மக்களின் வசதிக்காக கட்டப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை ஜெயலலிதாவின் அரசு என்று கூறிக்கொள்ளும் அதிமுக அரசுதான் இந்த பேருந்து நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்த பேருந்துநிலையத்தை காய்கறிச் சந்தையாக அதிகாரிகள் பயன்படுத்தினார்கள். தற்போது மரக்கன்றுகள் உற்பத்தி செய்து சாலை ஓரங்களில் நடவு செய்ய இந்த பேருந்து நிலையம் பயன்படுகிறதாம். இதிலும் தினசரி நாற்பது நபர்கள் வேலை செய்வதாக கூறி பணம் எடுப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாம்.
இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதன்நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதாவின் பெயர் பெயிண்டால் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை ஜெயலலிதாவின் அரசு என்று தம்பட்டம் அடிக்கும் அதிமுக அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த காரைப்புதூர் நடராஜனும் கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவால் அமைந்த அதிமுக ஆட்சியிலேயே அதுவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் தொகுதியிலேயே ஜெயலலிதாவின் பெயரை அழித்து விட்டார்கள். இவர்களா ஜெ.வின் தொண்டர்களை காப்பாற்றப்போகிறார்கள் என்று அதிமுகவினரே புலம்புகிறார்கள்.
இதே தேதியில் பல்லடம் – தாராபுரம் நெடுஞ்சாலையில் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட குண்டடம் பேருந்து நிலையமும் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையமும் இதே நிலையில்தான் உள்ளது.
– சௌந்திரராஜன்