தொழிற்சங்க கட்டிடத்தில் மது விற்பனை ! திமுக, அதிமுக நிர்வாகிகளால் பொதுமக்கள் பாதிப்பு !

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியாம்பாறை தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தில், அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேகர் என்பவர் அங்குள்ள அதிமுக கிளைச் செயலாளர் கருப்பண்ணன் உதவியோடு, அதிமுகவின் தொழிற்சங்க கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதிமுக தொழிற்சங்க கட்டிடமானது காலாவதியான நிலையில், போலியாக பெயர் மாற்றங்கள் செய்து, மின் இணைப்பு வாங்கப்பட்டு, அந்த கட்டிடத்தில் மளிகை கடை நடத்தும் சேகர் என்பவர், இரவு மற்றும் பகல் நேரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகிறார்.
இந்த கடை செயல்படும் இடத்திலிருந்து அருகாமையில் பள்ளிக்கூடம், ரேசன்கடை, பயணிகள் நிழற்குடை என அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் கூடும் இடமாகும். மதுப் பிரியர்கள் அருகில் உள்ள திமுக கிளை செயலாளர் சேகர் என்பவருடைய மளிகை கடையில் மதுபாட்டில்களை வாங்கி அங்குள்ள பயணியர் நிழற்குடை, ரேசன்கடை வாசலில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

இதுசம்பந்தமாக அந்த பகுதியினர் கூறுகையில், இரவு மற்றும் பகல் நேரங்களில் பெண்கள் பாதுகாப்புடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடித்து விட்டு பாட்டில்களை உடைப்பதோடு சில நேரங்களில் சண்டை போட்டுக்கொள்கின்றனர். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை முழுவதும் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் இதனால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுசம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வருவதாகவும், காவல்துறைக்கு புகார் அளித்தால் போலீஸாரும் அலட்சியமாக செயல்படுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆலம்பாடி கிராமத்தில் நடந்து வரும் பொதுமக்களுக்கு எதிரான சட்ட விரோத செயல்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து போலியான தொழிற்சங்க கட்டிட முகவரியில் நடத்தி வரும் மளிகை கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துவரும் கடையை இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த திமுக கிளை செயலாளர் சேகர் அதற்கு துணையாக இருந்த அதிமுக கிளை செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
– கா. சாதிக்பாட்ஷா