சினிமா

விஷாலிடமிருந்து தயாரிப்பாளர் சங்கத்தை வாங்கிய அரசு : கணக்கு பாக்க புதிய அதிகாரி நியமனம்!

தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
நடிகர், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருந்து வருகிறார். சங்க நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக கூறியும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கூறி விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஏ.எல்.அழகப்பன், மறைந்த நடிகர் ஜேகே ரித்திஷ் ஆகியோர் தி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி போராட்டம் நடத்தினர். மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க முயற்சித்த விஷாலை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகும் விஷால் தலைவராக தொடர்கிறார். வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடி பணத்தை முறைகேடு செய்துள்ளார் என்றும் விஷால் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, விஷாலுக்கு எதிரான அதிருப்தி தயாரிப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில், தயாரிப்பாளர் சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் முறையிட்டனர். இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, விசாரணை நடந்து, தயாரிப்பாளர் சங்க கணக்குகள் முறைப்படி கையாளப்படவில்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஏப்ரல் 29ம் தேதி முதல் தமிழ் திரைப்பட் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சிறப்பு அதிகாரியே எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது அரசு, சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டவிரோதம் என்றும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விஷால் தரப்பில் முறையிடப்பட்டது. விசாரணையை அடுத்து, தமிழக அரசு இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button