தமிழகம்

பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இதனிடைய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது தாத்தா மாரப்ப கவுண்டர் வழியில், ரூபாய் 200 கோடி அளவில் சொத்துக்கள் இருப்பதை அறிந்து, தனது மகன் சண்முகசுந்தரம் மூலமாக தகவல் திரட்ட ஆரம்பித்துள்ளார். இதனிடைய பல்லடம் நாரணாபுரம் கிராமத்துக்கு உட்பட்ட பனப்பாளையம் மற்றும் மாதப்பூர் கிராமத்தில் சுமார் 200 கோடி மதிப்பிலான 110 ஏக்கர் நிலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் சம்பந்தப்பட்ட நிலங்கள் குறித்து ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்தபோது, கடந்த 1904 ஆம் ஆண்டு பாக சாசன ஆவணத்தின்படியும், 1912 ஆம் ஆண்டு கிரைய சாசனத்தின் படியும், 1914 ஆம் ஆண்டு பாகசாசனத்தின் படியும், 19 24 ஆம் ஆண்டு பத்திரத்தின்படியும், 1945 ஆம் ஆண்டு கிரையசாசனத்தின்படியும், 1948 பாகசாசனத்தின் படியும் தனக்கும் தனது வாரிசுகளுக்கும் சுமார் 110 ஏக்கர் நிலம் இருப்பதையும் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் வில்லங்கச் சான்றிதழை சரி பார்த்தபோது கடந்த 1983 ஆம் ஆண்டு பல்லடம் பனப்பாளைத்தை சேர்ந்த சிலர் போலி ஆவணங்களையும், தனது தாத்தா மாரப்ப கவுண்டர் பெயரில் போலி இறப்பு சான்றிதழ் தயாரித்தும் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பரம்பரை பரம்பரையாக பூர்வீக வடிவில் பாத்தியப்பட்ட சொத்துக்களை போலியாக பத்திரப்பதிவு செய்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்திர பதிவுத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் சுமார் ஐந்து முறைக்கு மேல் மாவட்ட பத்திர பதிவு அலுவலர் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனிடையே பதிவாளர் குண்டன் அதிகாரத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து விசாரணை கைவிடப்பட்டுள்ளது. பின்னர் கடந்த ஏழு மாத காலமாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் வருவாய்த் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது மகன் சண்முகசுந்தரம் உதவியுடன் புகார் மனு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த்துறைக்கு புகார் மனு அளித்துள்ளார். பின்னர் தனது பெயருக்கே பட்டா வழங்க கோரியும் ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறார். இதனிடையே சம்பந்தப்பட்ட பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மண்டல துணை வட்டாட்சியர் பெரியசாமி என்பவரை செல்லம்மாள் மகன் சண்முகசுந்தரம் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் பல நாட்கள் சண்முகசுந்தரித்திடம் முறையாக பதில் எதும் கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களுக்கு வரச் சொல்லி அலைக்கழித்ததாகவும், ஒரு கட்டத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 5 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

பெரியசாமி
மண்டல துணை வட்டாட்சியர், பல்லடம்.

இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரம் லஞ்சம் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி 10.06.2025 இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு செல்லம்மாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பணப் பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, சுப்பிரமணியம் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக வருவாய்த் துறையினரின் அலட்சியத்தால் செல்லம்மாள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.

இதனிடையே செல்லமாளை ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து வந்து விசாரணைக்கு குடும்பத்தினர் ஆஜராகியுள்ளனர். ஆனால் மண்டல துணை தாசில்தார் பெரியசாமி விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை இடத்து துணை வட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிட்டுள்ளனர். துணை வட்டாட்சியர் தன்னால் விசாரிக்க இயலாது என தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் பேசிய சண்முகசுந்தரம் தன்னிடம் ரூபாய் 5 லட்சம் லஞ்சமாக பெரியசாமி கேட்டதாகவும், தான் தர மறுத்ததால் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து செல்லமாளை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர். இதனிடையே வருவாய்த் துறையினரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த குடிமக்களை விசாரணை என்ற பெயரில் சம்மன் அளித்து நேரில் அழைப்பது அவர்களை துன்புறுத்துவதற்கு சமமாகும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதைவிட கொடுமை சுய நினைவின்றி உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் மூதாட்டியிடம், கைரேகை எடுத்து விசாரணையை முடித்தது கொடுமையிலும் கொடுமை.

எனவே 90 வயதான மூதாட்டி தள்ளாத வயதில் தனக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 200 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்க போராடிவரும் நிலையில், ஆதாயத்தை எதிர்பார்த்து அதிகாரிகள் பணியாற்றி வருவது வருவாய்த்துறை அலுவலகத்தை வசூல் துறையாக மாற்றி விட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button