தேங்கி கிடக்கும் 150 கோடி கைத்தறி சேலைகள் கொள்முதல் செய்யப்படுமா ?.! பரமக்குடியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பரமக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் தனியார் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள ( 150 கோடி ரூபாய்க்கு மேல் ) கைத்தறி ரக சேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அசல் பட்டு மற்றும் கச்சா பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் புங்கர் பீமா திட்டத்தில் 2016 – 18 ஆம் ஆண்டு வரை உயிரிழந்த நெசவாளர் சங்க உறுப்பினர் குடும்பங்களுக்கு காலதாமதம் இன்றி உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி சேலை ரகங்களுக்கு குறியீடு அட்டை வழங்க வேண்டும், கைத்தறி நெசவாளர் சங்கங்களில் விற்பனையாகும் சேலைகளுக்கு முழு தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும்,

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை பள்ளி படிப்புகளுக்கு 5 ஆயிரம் மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு மாதம் ஓய்வூதியம் 3 ஆயிரம் வழங்க வேண்டும், திருமண உதவித்தொகை 50 ஆயிரம் வழங்க வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தறி கூலியை ரொக்கமாக வழங்கும் நடைமுறை தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பாரதிய கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.