தமிழகம்

கன்னியாகுமரியில் கனிம வள உதவிஇயக்குநர் பெர்னாட் அனுமதியோடு செம்மண் கடத்தல்

ஆரல்வாய்மொழி அருகே விவசாயத்தை அழித்து செம்மண் கடத்தும் கும்பலுக்கு கனிமவள துறை உதவி இயக்குநர் பெர்னாட் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலை மறியல் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள ஆரல்வாய்மொழி, குமாரபுரம், முப்பந்தல், தேவசகாயம் மவுண்டு ஆகிய இடங்கள் செம்மண் நிறைந்த பகுதிகளாகும். இங்கு உள்ள மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியே உள்ளது. இந்நிலையில் முப்பந்தல், தேவசகாயம்மவுண்டு பகுதிகளில் செம்மண் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது.
ஒரு ஏக்கர் நிலத்தில் செம்மண் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்று விட்டு 10 ஏக்கர் பரப்பளவிற்கு பல அடி ஆழத்திற்கு தோண்டி செம்மண் அள்ளி வருகிறார்கள். மேலும் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த இடத்தில் செம்மண் எடுக்காமல் அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்தில் மண் எடுக்கின்றனர். இதற்கு கனிம வளம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் துணை போவதாகவும், இதுவரை அனுமதி வாங்கிய இடத்திற்கு கனிமவள அதிகாரிகள் நேரடியாக சென்று அனுமதி வாங்கிய இடத்தில்தான் செம்மண் எடுக்கிறார்களா என்றும், நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தில் தான் எடுக்கிறார்களா எனவும் இதுவரை சென்று பார்க்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு பல அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுத்து செல்வதால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது என்றும், தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து விட்டது என்றும், மலையடிவாரத்தில் பல அடி ஆழத்திற்கு செம்மண் தோண்டப்படுவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
குமரிமாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் கனிமவளங்கள் கடத்தப்படுவதை ஆதாரத்துடன் பதிவு செய்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தலுக்கு அதிகாரிகள் அனைவரும் உடந்தையாக இருப்பது போல் தெரிகிறது. கடத்தலுக்கு காரணமான கனிமவளதுறை உதவி இயக்குநரை பணியிடைநீக்கம் செய்யவேண்டும். நகரில் உதவி இயக்குநருக்கு வீடுவாடகைக்கு எடுக்க பணம் ஐம்பது ஆயிரம் கனிமவளகடத்தல் கும்பலில் ஒருவர் வீட்டு உரிமையாளருக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். தினமும் உதவி இயக்குநரின் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்று வர கிராவல்மண் தொழிலதிபரின் சொகுசுகாரை பயன்படுத்துகிறார். லஞ்சம் பலவழிகளில் உதவி இயக்குநருக்கு கைமாறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து குமரிமாவட்டத்திற்கு வரும்போது அவர் கொண்டுவந்தது ஒரு பேக்மட்டும் தான். ஆனால் இன்று அவரது வாடகைவீட்டில் உள்ள கட்டில் மெத்தை, சோபாசெட், டீவி குளிர்சாதனப்பெட்டி போன்ற ஆடம்பரப்பொருட்கள் அனைத்தும் லஞ்சமாக பெற்றதுதான். இவரது வீட்டிற்கு வாங்கிய அனைத்து பொருட்களும் தனிநபர் ஏடிஎம் கார்டு மூலமே சம்பந்தப்பட்ட கடைக்கு பணத்தை செலுத்தியுள்ளார். அதற்கான ரசீதும் நம்மிடம் கிடைத்துள்ளது. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் லஞ்ச ஒழிப்புதுறை இவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏனோ?
இது குறித்து கனிம வளதுறை உதவி இயக்குநர் பெர்னாட்வை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, “இந்த விஷயங்கள் அரசின் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது. இது ஊரறிந்த விஷயம். முடிந்தால் மாவட்ட ஆட்சியரோ, அரசோ நடவடிக்கை எடுக்கட்டும். மாவட்டஆட்சியர் அனுமதியோடுதான் இங்கு அனைத்து பணிகளும் நடைபெறுகிறது.” என்று தெனாவட்டாக கூறினார். இதுகுறித்து விளக்கமறிய மாவட்ட ஆட்சியரை பலமுறை தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கிய இடத்தினை பார்வையிட்டு அனுமதி வழங்கிய இடத்தை விட அதிகமாகவோ, நிர்ணயித்த ஆழத்தினை விட அதிகமாக எடுக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button