அடுத்து சிவதாஸ் மீனா ஐஏஎஸ்..? : கசியும் தகவல்கள்..!
கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்தது. இதை உடன்பிறப்புகள் பெரிதும் கொண்டாடி தீர்த்தனர். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நமக்கெல்லாம் ஸ்டாலின் தான் என திமுகவினர் ஆரவாரம் செய்தனர். அதற்கேற்ப நிர்வாக ரீதியில் மிகவும் திறமையான அதிகாரிகளை தேடி தேடி பிடித்து கொண்டு வந்து அமர்த்தினார்.
தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி கந்தசாமி ஐபிஎஸ் என ஒவ்வொரு தேர்வும் புருவத்தை உயர்த்தி பார்க்கச் செய்தது. அதுமட்டுமின்றி நிதித்துறை முதல் இளைஞர் நலன் வரை அனைத்து துறைகளிலும் திறன் வாய்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
திமுக ஆட்சி தொடங்கிய சில மாதங்களில் ஆட்சி நிர்வாகத்தை பார்த்து தமிழக மக்கள் பெருமிதம் கொண்டனர். இப்படியே போனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான். யாராலும் அசைக்க முடியாது என்றும் புகழாரம் சூட்டினர். தற்போது இரண்டு ஆண்டுகளை திமுக ஆட்சி எட்டியுள்ள நிலையில் சர்ச்சைகளும், அதிருப்திகளும் கூடவே சேர்ந்து வந்துள்ளன.
இதற்கிடையில் ஸ்டாலின் பார்த்து பார்த்து தேர்வு செய்த அதிகாரிகள் ஒவ்வொருவராக பணி ஓய்வு பெற ஆரம்பித்துவிட்டனர். முதலில் கந்தசாமி ஐபிஎஸ், அடுத்து இறையன்பு ஐஏஎஸ், பின்னர் சைலேந்திர பாபு ஐபிஎஸ் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த அதிகாரிகளால் ஆட்சி நிர்வாகத்திற்கு பலன் கிடைத்ததா? சீர்திருத்தங்கள் நடந்தனவா? புரட்சி ஏற்பட்டதா? என்றால் கேள்விக்குறி தான் எனக் கூறுகின்றனர். குறிப்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியது. இதில் பலரது பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றில் ஒருவரது பெயரைத்தான் கோட்டை வட்டாரத்தில் பலரும் கசிய விடுவதை பார்க்க முடிகிறது. அவர் வேறு யாருமல்ல. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா ஐஏஎஸ்.
இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இடம்பெற்றவர். இந்த விஷயம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. பணி அனுபவம் என்பது 30 ஆண்டுகள். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழக கேடரில் இருக்கும் அதிகாரிகளில் மிகவும் சீனியர். நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்ற நற்பெயர் பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமின்றி தலைமைச் செயலாளர் தேர்வில் ஸ்டாலின் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட மாட்டார். தனது வேகத்திற்கு ஈடுகொடுக்கும் ஒருவரைத்தான் தேர்வு செய்வார். பலரிடம் ஆலோசனை நடத்தி கறை படியாத கையை கொண்டு வர விரும்புவார். அதற்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் சரியான ஆளாக இருப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகளின் உதவி அவசியம். அதற்கு புதிய தலைமை செயலாளர் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.