தமிழகம்

டப்பிங் யூனியன் முறைகேடுகள்..! சிக்கலில் ராதாரவி..!

தமிழ்த் திரையுலகில் திரைப்பட தொழிலாளர்களின் பாதுகாப்பான அமைப்பாக சொல்லப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட 24 சங்கங்களில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் சங்கக் கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நீதிமன்ற உத்தரவுப்படி பூட்டி சீல் வைக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றிலேயே ஒரு சங்கத்தின் கட்டிடத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது இதுதான் முதல் முறை. இந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர் நடிகர் ராதாரவி.

திரைப்படத்தில் நடிகர், நடிகைகள் பேசும் வசனங்களைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு திரைக்கு பின்னால் குரல் கொடுப்பது டப்பிங் கலைஞர்கள் தான். இந்த டப்பிங் கலைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு வேண்டும் என 1981 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் நடிகர் ராதாரவி இந்த சங்கத்தின் நிர்வாகத்திற்கு வந்தபிறகு சங்கத்திற்கு என சொந்தக் கட்டிடம் கே.கே.நகரில் உள்ள விஜயராகவபுரத்தில் வாங்கப்பட்டது.

இந்தக் கட்டிடம் 47 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். ஆனால் சங்க வரவு செலவு புத்தகத்தில் நடிகர் ராதாரவின் நிர்வாகம் 75 லட்சம் என கணக்கு காட்டி இருக்கிறார்கள். இதோடு இல்லாமல் காலி இடம் மட்டும் வாங்கியதாகவும், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என மேலும் 40 லட்சம் செலவாகும் என சங்கத்தின் பணத்தை எடுத்துள்ளார்களாம். அந்தக் கட்டிடத்திற்கு “டத்தோ ராதாரவி வளாகம்” என பெயரிட்டு நிர்வாகிகள் சொகுசாக இருப்பதற்காக 14 ஏசி மற்றும் ஷோபாக்கள் வாங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் தினசரி கஷ்டப்பட்டு உழைத்து சந்தாப்பணம் செலுத்திய பணத்தில், உறுப்பினர்கள் யாரும் எந்தப் பலனும் அனுபவிப்பது கிடையாதாம். உலகத்திலேயே ஒரு தொழிலாளி கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பளத்தை சங்கத்தின் நிர்வாகிகள் வசூலித்து 10% எடுத்துக் கொண்டு மீதிப்பணத்தை தொழிலாளர்களுக்கு கொடுப்பது இந்த ராதாரவி தலைவராக இருக்கும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது என்கிறார்கள். இந்த சங்கத்தில் உறுப்பினராக சேரவேண்டுமானால் 1.50 லட்சம் ரூபாய் ராதாரவியிடம் கொடுக்க வேண்டுமாம். இந்தப் பணம் சங்கத்திற்கு முழுமையாக வருகிறதா என்றால் இல்லையாம். வெறும் 20 ஆயிரம், 10 ஆயிரம் என சங்கத்தின் வரவு, செலவு கணக்கில் காட்டப்பட்டுள்ளதாம்.

மேலும் சங்கத்திற்கு வாங்கிய இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி வாங்க வேண்டும் என 75 ஆயிரம் பணத்தையும் ராதாரவி எடுத்துள்ளார். ஆனால் ராதாரவியின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்காமல் இருந்துள்ளனர். பின்னர் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் ராதாரவி நிர்வாகத்திற்கு வந்த பிறகு நடைபெற்ற முறைகேடுகளை ஆதாரங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியே கொண்டுவந்த உறுப்பினர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியிருக்கிறார் ராதாரவி.

இந்நிலையில் சங்கத்திற்கு தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் ராதாரவி தனியாக அணி அமைத்து போட்டியிடுகிறார். இவரது அணியை எதிர்த்து சிலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் ராதாரவி அணியினர் ஒட்டுமொத்தமாக வெற்றி பெறுகின்றனர். நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வில் தன்னை சிங்கமாகவும், எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர்களை நாய்கள் எனவும் விமர்சித்து ஆணவமாக பேசியிருக்கிறார். மேலும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை குஷ்பூவை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்து பேசினார்.

சில நாட்களில் அதாவது கடந்த 2022 செப்டம்பர் 20ஆம் தேதி ராதாரவி தலைமையில் இயங்கும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் கட்டிடத்திற்கு மாநகராட்சியில் கட்டிட அனுமதி வாங்காததால் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை பூட்டி சீல் வைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்த நாள் நமது இணையதளத்தில் டப்பிங் யூனியனுக்கு சீல் வைக்கப்படும் என செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தி எதிரொலியின் காரணமாக உறுப்பினர்கள் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்திடம் கேட்டபோது நக்கலாக பதிலளித்துள்ளார் ராதாரவி. அதன்பிறகு நீதிமன்றம் சென்று 6 மாத காலம் அவகாசம் வாங்கினார்.

ஆனால் ஆறு மாத காலம் அவகாசம் முடிந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்தச் சங்கத்தின் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் திரைப்படத்துறையினர் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக சினிமாத்துறை பிரபலங்களும், டப்பிங் யூனியன் உறுப்பினர்களும் நம்மிடம் கூறுகையில், நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த போது நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தன்னிச்சையாக விற்றதாக, நடிகர் நாசர் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் விரைவில் ராதாரவிக்கு எதிரான தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் தற்போது டப்பிங் யூனியனில் அவர் செய்த முறைகேடுகளின் பலனாக அந்த சங்கத்தின் கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் சங்கத்தின் பணத்தைத்தான் செலவு செய்துள்ளார்.

இதுவரை ராதாரவி தனது அரசியல் செல்வாக்கால் அதாவது கடந்த ஆட்சிக்காலத்தில் வழக்குகளை தாமதப்படுத்தி தண்டனையிலிருந்து தப்பித்து வந்தார். இனிவரும் ஒவ்வொருமாதமும் ராதாரவி சிக்கலில் சிக்கித் தவிக்கும் காலமாகவே அமையப்போகிறது. அதற்கு சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் ஒன்றே சாட்சி என்கிறார்கள் வேதனையுடன்…

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button