விமர்சனம்

பணம், நகைக்காக விருந்தினரை கொலை செய்த இளம்பெண் ! “கொன்றால் பாவம்” திரைவிமர்சனம்

கன்னடத்தில் 18 படங்கள், தெலுங்கில் ஒரு படம் என 19 படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “கொன்றால் பாவம்”. இந்தப் படத்தில் வரலெட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ், இயக்குனர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதைப்படி… 1980 காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் ஆற்றங்கரையோரம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப்பகுதியில் சார்லி, ஈஸ்வரி ராவ் தம்பதியர் மகள் வரலட்சுமியுடன் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த இவர்களது வாழ்க்கை, மழை பெய்யாத காரணத்தால் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் சார்லிக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வட்டிக்குமேல் வட்டிக்கு கடன் வாங்குகிறார். இதனால் நிலத்தை அடமானம் வைத்து, சொந்த நிலத்திலேயே கூலிக்கு வேலை செய்கின்றனர்.

இதனால் தனது மகள் வரலெட்சுமிக்கு முப்பது வயதைத் கடந்தும் தக்க சமயத்தில் அவருக்கு திருமணம் செய்து கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இந்த சமயத்தில் நகரத்தில் இருந்து கிராமப்புறங்களுக்குச் சென்று தான் காணும் காட்சிகளை கார்ட்டூன் சித்திரங்களாக வரையும் இளைஞர் ஒருவர் அந்த பகுதிக்கு வருகிறார்.

அப்போது சார்லி வீட்டிற்கு வந்து அவரது மனைவியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு வாங்கி தாகம் தீர்க்கிறார். பின்னர் நான் இன்று ஒருநாள் இரவு உங்கள் வீட்டில் தங்குவதற்கு அனுமதி தர முடியுமா என கேட்க, வயசும் பெண் இருக்கும் இடத்தில் தங்க வைப்பதற்கு தயக்கம் காட்டி, பின்னர் சம்பாதிக்கின்றனர்.

அதன்பிறகு இந்த குடும்பத்திற்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர் வந்து மிரட்டிச் செல்கிறார். இதனைக் கேட்ட சந்தோஷ் பிரதாப் தன்னிடம் உள்ள பணம் நகைகளைக் காட்டி எடுத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து அவரை அன்புடன் உபசரிக்கின்றனர்.

ஆனால் சரியான வயதில் வாழ்க்கையில் நடக்க வேண்டிய சம்பவங்கள் எதுவும் நடக்காததால், விரக்தியில் இருக்கும் வரலெட்சுமிக்கு அந்த நகை, பணத்தின் மீது ஆசை கொள்கிறார். இதற்கிடையில் அந்த இளைஞர் கோழிக்கறி சமைத்து தரமுடியுமா என கேட்க, அதற்கான வேலையில் மும்முரமாகிறார் வரலெட்சுமியின் தாயார். பின்னர் தனது பெற்றோரிடம் அவனை கொலை செய்து பணம் நகைகளை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார் வரலெட்சுமி.

அதன்பிறகு அந்த இளைஞரை கொலைசெய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனரா ? வரலெட்சுமிக்கு திருமணம் நடந்ததா ? யார் அந்த இளைஞர் என்பது மீதிக்கதை…..

சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

மரம் முத்தினால் வைரம், மனுஷன் முத்தினால் என்னாகும் என்கிற கிராமத்து பழமொழிக்கேற்ப, சரியான வயதில் திருமணம் ஆகாததால் ஆசைகளையும், கோபத்தையும் அடக்கிக்கொண்டு வாழ்ந்துவரும் சராசரி பெண் கதாபாத்திரத்தில் வரலெட்சுமி நடித்திருக்கிறார் என்பதைவிட, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூறினால் மிகையாகாது.

தாய், தந்தை கதாபாத்திரத்தில் சார்லி, ஈஸ்வரி ராவ் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் சாராயக் கடை நடத்துபவர்களை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணிய சிவா.

மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button