தமிழகம்

சொத்துக்காக பெற்ற தாயை மனநல மருத்துவமனையில் அடைத்த ஆசிரியை..!

சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு, பெற்ற தாயை தனியார் மனநல மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை என்ற பெயரில் கிழிந்த ஆடைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி ஆசிரியை மீது பாதிக்கப்பட்ட பெண் போதகர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரில் உள்ள குடும்பங்களின் கவலை தீர வீடு வீடாக போதனை செய்து வந்த தங்கபாய் சாந்தகுமாரி என்ற 65 வயதான பெண் போதகர், தான் பெற்ற மகளால் ரீவாம்ப் என்ற தனியார் மருத்துவ மனையில் ஒரு வருடத்திற்கு மேல் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்..

சாந்தகுமாரியின் மகள் ராஜகுமாரி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். ராஜகுமாரிக்கு திருமணமாகி வாலிப வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் தனது தாய் சாந்தகுமாரி பெயரில் உள்ள வீடு மற்றும் மனை பகுதிகளை, தன் பெயருக்கு மகள் தங்கபாய் ராஜகுமாரியும் அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் எழுதி கேட்ட போது கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடுமையாக தாக்கி தன்னிடம் உள்ள ஒரிஜினல் சொத்து பத்திரங்களை பறித்துக் கொண்டு, தனக்கு பைத்தியம் என பட்டம் கட்டி தனது பேரனின் நண்பர்கள் பணிபுரிந்துவரும், அம்பத்தூரில் உள்ள ரீவாம்ப் என்ற தனியார் மனநல மருத்துவமனையில் தன்னை கட்டாயப்படுத்தி சிகிச்சை என்ற பெயரில் சிறைவைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார் சாந்தகுமாரி
ஒருவருடத்திற்கும் மேலாக அங்கு கிழிந்த நைட்டியுடன் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தன்னை ஓய்வு பெற்ற மிலிட்டரி கர்னலான தனது அண்ணன் வந்து மருத்துவமனைக்கு உரிய பணம் கட்டி மீட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார் சாந்தகுமாரி
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சாந்தகுமாரியின் மகளான ஆசிரியை ராஜகுமாரி, மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாயை கையில் வைத்துக் கொண்டு தனது மாமா, தங்களது சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுவதாகவும் அதற்கு வாரிசு என்ற அடிப்படையில் தான் தடையாக இருப்பதால் தங்கள் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். தனது தாயின் உடல் நிலை குறித்து ரீவாம்ப் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். சாந்தகுமாரியை 13 மாதங்கள் தனது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்ததாக கூறிய, ரீவாம்ப் மருத்துவமனையின் மருத்துவர் தேவராஜ், போதகர் சாந்தகுமாரிக்கு என்ன நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை சொல்ல மறுத்து விட்டார்.

சொத்துக்களை அபகரிக்க, வயது முதிர்ந்த போதகர் சாந்தகுமாரிக்கு நடந்ததாக கூறப்படும் கொடுமைகள் குறித்து, திருவள்ளூர் காவல்துறையினர் விரிவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு..!

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button