திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு !

திண்டுக்கல் மாநகராட்சியில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி, பாதாள சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ. 17 கோடியே 73 லட்சத்தி 16 ஆயிரத்தி 820 வரை (ரூ.17,73,16,820) வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில், அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர் திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 1 முதல் 12 வரை சொத்து வரி வசூலித்ததில் ரூ.18,00,272 முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருகிறது. அதேபோல், சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு 137 குப்பை தொட்டிகள் ரூ.19,834 மதிப்பை விட ரூ.37750 என உயர்த்தி வாங்கியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன் (ஓய்வு), முன்னாள் மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி உதவி பொறியாளர் சுவாமிநாதன், சென்னை, அம்பத்தூர், சுசி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் நாகராஜன் ஆகியோர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



