குற்ற உணர்வோடு வாழும் அனுபவத்தின் அடையாளமாகச் சுழலும் “சுழல்”
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள “சுழல் தி வோர்டெக்ஸ்” வெப்சீரீஸ் தொடரில் நடிகர் பார்த்திபன், கதிர், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இயற்கை எழில் மிகுந்த மலைப் பிரதேஷத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில், சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலை தொழிலாளர்களின் தொழிற்சங்க தலைவராக இருக்கிறார் பார்த்திபன். தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் பார்த்திபன். அப்போது நடைபெறும் பிரச்சனையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டி, சப் இன்ஸ்பெக்டர் கதிர் தலைமையில் காவல்துறையினர் தடியடி நடத்தி தொழிலாளர்களை அடித்து விரட்டுகின்றனர். அன்று இரவு தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. அதே நேரத்தில் பார்த்திபனின் இரண்டாவது மகள் நிலா காணாமல் போகிறாள்.
தொழிற்சாலையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? நிலாவுக்கு என்னாச்சு? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தேடி கதை சுழல்கிறது. இந்த தொடர் எட்டு எபிசோட் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை ஆரம்பத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
அந்த ஊரில் இருக்கும் தொழிற்சாலையால் விளை நிலங்கள் பாதிப்பு, அந்த மக்களுக்கு ஏற்படும் இதய பாதிப்புகள், குடும்பத்தில் கனவன், மனைவி பிரச்சனைகளால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள், பெண் குழந்தைகளுக்கு இளம் வயதில் சில வக்கிரம் பிடித்த மனிதர்களின் பாலியல் சீண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளையும், புராண கதைகளோடு இறைவனை வழிபடும் மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்சிப்படுத்திய இரட்டை இயக்குனர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த தொடருக்கான கதையை எழுதி நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்கள், சிறப்பாக இசையமைத்துள்ள இசையமைப்பாளர், மிகவும் நேர்த்தியாக அதாவது அங்காலம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவை தத்ரூபமாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் மற்றும் இந்த தொடரில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.
தனது குழந்தைகளிடம் மனம் திறந்து பேசாததால் அவர்களின் பிரச்சனைகள் தெரியாமல் போனதே என்கிற குற்ற உணர்வோடு வருந்தும் தந்தை பார்த்திபன், இறை நம்பிக்கை இல்லாத கணவனோடு வாழ பிடிக்காமல் ஆசிரமம் சென்றதால் குழந்தைகளின் திசை மாறியதற்கு காரணமாகி விட்டோமே என வருந்தும் தாய் என குற்ற உணர்வோடு இந்த உலகத்தில் வாழும் மனிதர்களின் அனுபவத்திற்கு ஒரு அடையாளம் தான் “சுழல்” என உணர்த்துகிறது இந்த தொடர்.