குழந்தைகள் கொண்டாடும் “மைடியர் பூதம்” விமர்சனம்
மன்னன் கற்கிமுகி ( பிரபுதேவா) நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்து, பின்னர் குழந்தை பிறந்ததும் அவனுக்கு கிங்கினி என பெயரிட்டு அவனை செல்லமாக வளர்க்கிறார். ஒருநாள் அவன் விளையாடும் போது குகைக்குள் தவறி விழுந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் தவத்தை கலைத்து அவரது சாபத்திற்கு ஆளாகிறான். அந்த சாபத்தை கற்கிமுகி ஏற்றுக்கொண்டு சிலையாக மாறி பூமியில் வந்து விழுகிறான். அந்த சிலையை தொட்டு துடைப்பவர்கள் மூலம் சாப விமோசனம் அடைந்து உயிர்பெறலாம்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பாராத விதமாக பள்ளிச் சிறுவன் திருநாவுக்கரசு அந்த சிலையை தொட்டு விமோசனம் அளிக்கிறான். ஆனால் உயிர் கொடுத்தவர்கள் 48 நாட்களுக்குள் ஒரு மந்திரத்தை சொன்னால் மட்டுமே கற்கிமுகி மீண்டும் பூத உலகத்திற்கு சென்று மகனுடன் சேர முடியும். ஆனால் சிறுவன் திருநாவுக்கரசுக்கு சரளமாகப் பேச முடியாது. திக்கிப் பேசும் குறைபாடு உள்ளவன். அவன் மந்திரத்தை சரியாக உச்சரித்து கற்கிமுகி தனது மகன் கிங்கினியோடு சேர்ந்தாரா என்பது மீதிக்கதை.
கற்கிமுகி கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா குழந்தைகளுக்கு பிடித்த வகையில், நகைச்சுவையாகவும், மாயங்கள் புரிவது என அவர்களுக்கு ஏற்ற உடல் மொழியிடன் நடித்துள்ளார். கற்கிமுகி சிறுவன் திருநாவுக்கரசுக்கு உற்ற தோழனாக மாறி அவனுக்கு நம்பிக்கையை வளர்த்து பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கும் அளவுக்கு உற்சாகம் அளிக்கிறான். இதனால் திருநாவுக்கரசு கற்கிமுகி மீது ஆழமான அன்பை செலுத்துகிறான். தான் திக்கிப் பேசும்போது சக தோழர்கள் கிண்டல் செய்ததால் ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் போது சிறுவனின் நடிப்பு அற்புதம். அவனுடைய அம்மாவாக ரம்யா நம்பீசன் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
திக்கிப் பேசுவது உடல் சார்ந்த குறைபாடு கிடையாது. மனம் சார்ந்த பிரச்சினை. அவர்கள் பேசும் போது காது கொடுத்து கேட்டு, அவர்களது மனக்குறையை போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்தாலே திக்குவாய் பிரச்சனையிலிருந்து வெளியே வரலாம் என இந்த படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் குடும்பத்துடன் குழந்தைகள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.