ரத யாத்திரை தொடங்கிய “மாயோன்” படக்குழுவினர்
டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் விஷ்ணு சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவில் இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நம் பாரம்பரிய கலையான தோல் பாவை கூத்து அரங்கேற்றப்பட்டது. மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக ஆடியோ விளக்கத்துடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டது. அகல் பவுண்டேசனை சேர்ந்த பார்வையற்றவர்கள் இந்த சிறப்பு டிரெய்லரை பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசும்போது…
நான் இப்படத்தில் நடிப்பதாக எல்லாம் ப்ளான் இல்லை. ஆனால் படப்பிடிப்பின் போது ஒரு காட்சி தான் என சொல்லி என்னை நடிக்க வைத்து விட்டார்கள். எனக்குள் பல காலம் இருந்த கதை. உங்கள் அனைவருக்கும் புடிக்குமென நம்புகிறேன். சைக்கோ படத்தின் போது தான் பார்வையற்றோருக்கு டிரெய்லர் செய்ய வேண்டும் என்ற ஐடியா முதலில் தோன்றியது. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒரு சமூக அக்கறையாக இதை செய்தோம். சைக்கோ படத்தின் போது பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப்பெரும் சந்தோசத்தை தந்தது. அப்போது என் எல்லா படத்தையும் பார்வையற்றோர் ரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தை தரும்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசும்போது…
நான் இந்தப்படத்தில் ஒரு நடிகன் தான். இது கடவுள் படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. இந்தப்படத்தில் படப்பிடிப்பில் ஒரு குகை மாதிரியான இடத்திற்கு சென்றோம். அங்கு உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கம் பார்த்து பிரமித்தேன். கலை இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
நடிகர் சிபிராஜ் பேசும்போது…
‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘டாவின்சி கோட்’ படங்களெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது இந்தப்படத்தில் நிறைவேறியது. இளையராஜா இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் .அதுவும் இந்தப்படத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இந்தப்படம் சாமி படமெல்லாம் இல்லை. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது. மேடையில் குட்டிக்கதை சொல்லலாம். ஆனால் இந்தப்படத்தின் கதையை சொல்ல முடியாது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
இயக்குநர் N.கிஷோர் பேசியதாவது….
இந்த திரைக்கதை மிக ஃபிரஷ்ஷாக இருந்தது. சிபிராஜ் எப்போதும் புதுமையான கதைகள் செய்பவர். அதனால் அவரிடம் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்தது. படத்தில் கே எஸ் ரவிக்குமார், மாரிமுத்து, பக்ஸ் என ஒவ்வொருவருமே படத்திற்கு பொருத்தமாக அமைந்தார்கள். படத்தை நிறைய உழைப்பில் நிறைய பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக அருண்மொழி சார் தான் காரணம். அவர் படம் தான் முக்கியம் என புரிந்து கொண்டு படத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்தார் மேலும் ஓடிடி வாய்ப்பு இருந்தும் படத்தை திரையரங்கில் தான் கொண்டு வருவேன் எனும் அவரின் நம்பிக்கைக்கு நன்றி. கந்தர்வ இசை படத்திற்கு தேவைப்பட்டது. எங்களுக்கு இளையராஜாதான் ஒரே வாய்ப்பாக தோன்றினார் . அவரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. இப்படத்தின் கதை இந்தியா முழுக்க எளிதாக புரிந்து உணர்ந்துகொள்ள கூடிய கதையாக இப்படம் இருக்கும்.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது.