எலும்பு புற்றுநோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம் ! “அகத்தியா” படத்தின் திரைவிமர்சனம்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், சார்லி, ரோகிணி, லாரா, இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், பா. விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அகத்தியா”.
கதைப்படி.. படப்பிடிப்பிற்காக கலை இயக்குநர் ஜீவா தனது நண்பர்களுடன், பாண்டிச்சேரியில் உள்ள பழைய பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து, அமானுஷ்யங்கள் உள்ள பேய் பங்களாவாக வடிவமைக்கிறார். அப்போது ஆங்கிலேய காலத்து பியானோ மண்ணுக்குள் புதைந்த நிலையில் கிடைப்பதை பார்க்கின்றனர். அதை சேதமாகாமல் எடுத்து சுத்தம் செய்து வைத்ததோடு, அந்த பங்களாவை நிஜ பேய் பங்களாவாக மாற்றி விடுகிறார்கள். இதற்கிடையில் படப்பிடிப்பை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் ஜீவாவிடம் கூற ஒட்டுமொத்த குழுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

பின்னர் ராஷி கண்ணா ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக அந்த பேய் பங்களாவை பொதுமக்கள் பார்வைக்கு விட்டு, செலவு செய்த பணத்தை மீட்க முடிவு செய்கிறார்கள். அப்போது ராஷி கண்ணா அந்த பியானோவை வாசிக்க, அதிலுள்ள ரகசிய அறை திறக்கிறது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு அமானுஷ்யம் ஜீவாவின் கண்களில் வந்து போகிறது. பின்னர் அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என தேடும்போது, பழங்கால படச்சுருல் ( பிலிம் ரோல் ), ஸ்டெதஸ் கோப், எழும்புக்கூடு போன்றவைகள் தென்பட, பிலிம் ரோலில் என்ன இருக்கிறது என பார்த்தபோது, 1940 ல் பாண்டிச்சேரி கவர்னராக இருந்த எட்வர்ட் என்பவரின் தங்கையை சித்த மருத்துவத்தில் அர்ஜூன் குணப்படுத்தியதாகவும், பின்னர் அவரைரையே திருமணம் செய்து கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். எழும்பு புற்றுநோய்க்கும் மருந்தை தயார் செய்து வைத்துள்ளார். அதோடு அந்த பிலிம் ரோலில் கதை முடிகிறது.

இதற்கிடையில் ஜீவாவின் தாய் எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் அவதிப்படுகிறார். தாயை குணப்படுத்த சித்த மருத்துவர் கண்டுபிடித்த மருந்தை தேடி அந்த பேய் பங்களாவுக்கு ஜீவா செல்ல முற்படும்போது, ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளே விடாமல் தடுக்கிறது.
ஜீவா பேய் பங்களாவுக்குள் சென்று மருந்தை எடுக்க முடிந்ததா ? அவரது தாயார் என்னானார் என்பது மீதிக்கதை…
தற்போதைய சூழ்நிலையில் விதவிதமான நோய்கள் புதிது புதிதாக தோன்றுகிறது. ஆனால் ஆங்கில மருந்துகள் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இயற்கை மருத்துவம் தான் உதவுகிறது. சமீபத்தில் கொரோனா காலத்தில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட மருந்துகளை மக்கள் பயன்படுத்தியதை அனைவரும் அறிவோம். அதேபோல் தீராத நோய்களுக்கும் நமது முன்னோர்கள் மூலிகைகள் மூலம் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். உலகிற்கே தமிழர்கள் முன்னோடிகள் என்பதை இயக்குநர் பா. விஜய் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

அதேபோல் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் தத்ரூபமாக, அந்த காலகட்டத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பேய் படத்தில் காமெடியிடன் ஃபேண்டஸி, த்ரில்லர் கலந்து ரசிக்கும்படி திரைக்கதை அமைத்துள்ளார். பாடலாசிரியர் மட்டுமல்லாது, சிறந்த படைப்பாளி என நிரூபித்திருக்கிறார் பா. விஜய்.

அர்ஜீன் தோன்றும் காட்சியில் தான் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. இந்த படத்தில் அர்ஜூன் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். தமிழர்களின் பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் மகத்துவத்தை பதிவு செய்த படத்தில், அடுத்த தலைமுறைக்கு பாடமாக அர்ஜூன் நடித்த காட்சிகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் நடிகர் ஜீவாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் சார்லி, ரோகிணி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ரோகிணி இந்த படத்திற்காக மொட்டை அடித்து நிஜமாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் நடித்து, அந்த கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.