பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இப்பணிகள் துவங்கிய நாளிலிருந்து பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பு இன்றி சாலைகளை மூடி தடுப்பு ஏற்படுத்துவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி பொள்ளாச்சி சாலை வழியாக லால் ரோடு சென்று சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வேலை அமைக்கும் பணிகள் குறித்து திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இல்லாமல் பணிகள் மேற்கொண்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி சாலையில் இருந்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு செல்ல இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனிடையே எந்த ஒரு முன்னுரிப்பும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலைகள் தரமற்று காணப்படுவதோடு, தார் சாலைக்கு மேக்கப் போடும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் கருதுகின்றனர்.

பல்லடம் நகராட்சியின் 11 வது வார்டில் நடைபெற்றிருக்கின்ற வரைக்கும் இப்பணிகள் தரமற்றவையாக உள்ளதாக சமூக ஆர்வலர் அண்ணாதுரை குற்றச்சாட்டி உள்ளார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலைக்கு சென்று சமூக ஆர்வலர் அண்ணாதுரை கையில் துடப்பத்துடன் சென்று புதிதாக போடப்பட்டிருக்கும் தார் சாலையை கூட்டி தரமற்ற தார் சாலையின் அவலம் குறித்து விளக்கினார். சுமார் 40 லட்சம் செலவீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தார் சாலை தரமற்று காணப்படுவதாகவும், ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ளும் போது எந்தவித அறிவிப்பும் இன்றி மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் தார் சாலை அமைக்கும் போது ஏற்கனவே அமைந்திருக்கும் சாலைகளை நீக்கிவிட்டு பின்னர் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் சாலைகள் மீது தற்போது சாலை அமைப்பதால் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் அண்ணாதுரை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார். குறுகிய காலத்தில் தறமற்ற சாலைகள் அமைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே தற்போது போடப்பட்டிருக்கும் மேக்கப் சாலைகளை உடனடியாக நீக்கிவிட்டு புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. மேக்கப் போட்டு அழகு பார்ப்பதை விட்டு நகராட்சி நிர்வாகம் பொது மக்களின் தேவைகள் அறிந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே பல்லடம் நகர மக்களின் எதிர்பார்ப்பு.