13 ஆண்டுகளாக கணக்கு தணிக்கை செய்யாத திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம்

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழிற்துறையில் பெண்கள் தொழில்முனைவோர்களாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. சங்கம் தொடங்கி 13 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை சங்கத்தின் வரவு செலவுகளை தணிக்கை செய்யாமல் குறிப்பிட்ட ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்கு பயன்படுத்துவதாகவும், சங்கத்திற்கான பெயரை முறையாக பதிவுத்துறையில் பதிவு செய்து அனுமதி பெறவில்லை எனவும் சங்கத்தின் மகளிர் உறுப்பினர்கள் வள்ளியம்மாள் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறுகுறு கிராமிய தொழில் முனைவோர் சங்கத்திற்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
இதுபற்றி வள்ளியம்மாளிடம் விசாரிக்கையில், சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்ததே எங்களுக்கான பாதுகாப்பிற்காகவும், எங்களுக்கு சங்கம் பல்வேறு உதவிகளை செய்யும் என்ற நம்பிக்கையிலும் தான். மேலும் இந்த சங்கத்தை பாரதிதாசன் பல்கலைகழகமே நடத்துகிறது. அதனால் இதன் நிர்வாகம் முறையாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைந்தோம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம் என்ற பெயரில் சங்கம் தொடங்கி அதற்கு முறையாக பான்கார்டு பெற்று வங்கிக் கணக்கு தொடங்காமல் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம் என்ற பெயரில் தவறுதலாக சட்டவிரோதமாக பல வங்கிகளில் கணக்குகளை தொடங்கினர். தற்போது பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளில் பதிவு பெறாத பெயரில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்கிறார்கள். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த செயலாளரை பினாமியாக வைத்துக் கொண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை தற்போது இந்த சங்கத்தை இயக்கி வருகிறார். கடந்த பதிமூன்று ஆண்டுகளாக சங்கத்தின் வரவு செலவுகளை தணிக்கை செய்யாமல் பல்வேறு முறைகேடுகள் செய்து வருகிறார். இவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால் இவரைப் பற்றி விசாரணை நடத்தி இவரை பணி இடைநீக்கம் செய்தார் பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மீனா. இதேபோல் இந்த சங்கம் பற்றியும் இதன் தலைமை பற்றியும் நன்கு விசாரித்து அரசு இடத்தில் இருந்த இந்த சங்க அலுவலகத்தை உடனே காலி செய்து இவர்களை சந்திக்கவே மறுத்தார் முன்னாள் ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன்.
எந்த ஒரு சங்கமும் மாவட்ட பதிவாளரிடம் பதிவுச் சான்றிதழ் பெற்று, வருடத்திற்கு ஒருமுறை சங்கத்தின் வரவு செலவுகளை தணிக்கை செய்து தணிக்கைச் சான்றிதழை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் காண்பித்து சங்கத்தின் பதிவு எண்ணையும், சங்கத்தின் பெயரையும் ரெனிவல் செய்ய வேண்டும். ஆனால் திருச்சி மாவட்ட பதிவாளர் இவர்கள் முறையான கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யாதது தெரிந்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கணக்குகளை பறிமுதல் செய்து, உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் ஊழல் பற்றி விசாரிக்காமல் கனராவங்கி இந்த சங்கத்திற்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொலிரோ காரை பரிசாக வழங்கியது. ஆனால் சங்கமோ சங்கத்தின் உறுப்பினர்களோ ஒரு நாள் கூட அந்தக் காரை பயன்படுத்தியது கிடையாது. சங்கத்திற்கே அந்த கார் வந்ததே இல்லை. சங்கத்தின் பணம் 15 லட்ச ரூபாய் வங்கியில் இருந்தும் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவது இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களையும், பணி அனுபவம் இல்லாதவர்களையும் தான் சங்கத்தில் வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
சங்கத்தின் பணத்தை முறைகேடாக செலவு செய்து வீணடித்தது, 13 ஆண்டுகள் சங்கத்தின் கணக்குகளை தணிக்கை செய்யாதது, அரசு நிறுவனங்களை ஏமாற்றி உண்மைகளை மறைத்து நன்கொடை பெற்று துஷ்பிரயோகம் செய்தது, சங்கத்தின் வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது போன்ற குற்றங்களை செய்த போலியான நிர்வாகிகள் மீதும் இவர்கள் தவறு செய்ய உடந்தையாக இருந்த பேராசிரியர் மணிமேகலை மீதும் தமிழக அரசு உரிய விசாரணை செய்து சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி உரிய நிர்வாகிகளிடம் சங்கத்தை ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசும் (பதிவுத்துறை தலைவர்) பல்கலை கழக நிர்வாகமும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்கள்.
–சூரியன்