நடிகையின் காதலர் தற்கொலை.. பின்னணி என்ன?
திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித்குமார், உதயநிதிஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும், அவரது படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்த காந்தி லலித் குமார், நடிப்பின் மீது கொண்ட ஆசையின் காரணமாக பெண் வேடமெல்லாம் போட்டு புகைபடம் எடுத்துக் கொண்டவர்.
தனக்கு நெருக்கமாக இருந்த நடிகை நிலானியுடனான தொடர்பால் தனது வேலையை பறிகொடுத்து விட்டு நிலானியை படப்பிடிப்புக்கு கொண்டு சென்று விடும் வேலை செய்துவந்தார். அவருடனான தொடர்பை முறித்துக் கொண்டு நடிகை நிலானி போலீசில் அளித்த புகாரால் விரக்தி அடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட காந்தி லலித்குமாரின் செல்போனை கைப்பற்றியது காவல்துறையினர் இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் நடிகையுடனான தொடர்பு குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
3 வருடங்களுக்கு முன்பு , ரெட்ஜெயன்ட் அலுவலகத்தில் காந்தி லலித்குமார் பணியாற்றிய போது, நடிக்க வாய்ப்புக் கேட்டுச் சென்ற நடிகை நிலானியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த நிலானியின் அழகில் மயங்கி காதலில் விழுந்தார் காந்தி லலித்குமார்..! கையில் தாராளமாக காசு புழங்க நிலானியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார் காந்தி லலித்குமார். நிலானியின் இரு குழந்தைகளையும் பள்ளியில் கொண்டு விடும் அளவுக்கு குடும்பத்தில் ஒருவரான காந்தி லலித்குமார், நடிகை நிலானியுடன் வளசரவாக்கத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
அதே நேரத்தில் நிலானியை முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல், ஒரு காதல் கண்மணி படத்தில் வருவது போல மேலை நாட்டு பாணியில் லிவ் இன் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். அதற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் காவல் துறையினரிடம் கிடைத்துள்ளது. அதில் அவர்கள் இருவரும் ரெயில் பயணத்தின் போது நெருகமாக இருந்த வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
லலித்குமாருக்கு வேலை பறி போனதால் பணவரவு குறைந்து, அவர்கள் உறவிலும் விரிசல் விழுந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு முன்பு முதலில் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. போலீசார், இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் காந்தி லலித்குமார் தன்னை தொல்லை செய்வதாக புகார் அளித்துள்ளார் நடிகை நிலானி. ஒரு கட்டத்தில் சம்பாதித்த பணத்தை எல்லாம் நிலானியின் அழகில் மயங்கி கொட்டித்தீர்த்த காந்தி லலித்குமார் செய்வதறியாது தவித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நிலானியை மறக்க முடியாத மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய காதலர் காந்தி தற்கொலையில் தனக்கு தொடர்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். காந்தியை தான் திருமணம் செய்யவே எண்ணியிருந்ததாகவும், ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தன்னிடமே பணத்தை பெற்று குடிபழக்கத்துக்கு ஆளானதாகவும் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், மறுத்தால் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நிலானி தெரிவித்துள்ளார். இதனால் தான் ஒதுங்கியிருந்ததாகக் கூறியுள்ள நிலானி, தற்போது காந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதற்கு தானே காரணம் என உருவகப்படுத்தி, அவருடன் தான் இருந்த படங்களை இணையதளத்தில் போட்டு வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நிலானி கோரியுள்ளார். இந்த மனு நடவடிக்கைக்காக பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கண்டதும், கொண்டதும் காதல் என்று நம்பி திரிவோருக்கு உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை பாடம்..