நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தைப்பூச நாளன்று பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வந்து நீண்ட நேரம் காத்திருந்து பழனிமலை மீதுள்ள முருகப்பெருமானை ‘அரோகரா’ கோஷத்துடன் வழிபட்டனர்.

தைப்பூச நாளன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் 4000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். தைப்பூசத்திற்காக வரும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச்செல்ல போதுமான பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பழனி நகரத்திற்குள் வரும் பேருந்துகளை மாற்று வழிகளில் இயக்க வழிவகை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் வழிநெடுகிலும் பேருந்துகள் அணிவகுத்து நின்றது. இதனால் தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலை என பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.

குறிப்பாக காந்தி மார்க்கெட் வழியாக மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டதால் அவ்வழியாக வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உள்ளூர் காவலர்களை முக்கியமான இடங்களில் பணியில் அமர்த்தாமல், வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவலர்களை பணியில் ஈடுபட செய்ததால் ஏற்பட்ட சிக்கல்கள் தான் இதற்கு காரணம். பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து கரூர் செல்லும் பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையம் வழியாகவும், புது தாராபுரம் சாலை வழியாகவும் இயக்கப்பட்டது. மேலும் கோவை, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், ஈரோடு, திருப்பூர், கோவை செல்லும் பேருந்துகளும் தாராபுரம் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு கூட வழி இல்லாமல் பெரும் இடையூறு ஏற்பட்டது. முன்கூட்டியே பழனி போக்குவரத்து காவல்துறை முறையான திட்டமிடலுடன் விழாவிற்கு தயாராகி இருக்க வேண்டும். வாகன நெரிசல்கள் மட்டுமல்லாது பாதுகாப்பு பணியிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நெரிசலை கட்டுப்படுத்தி, பக்தர்கள் சிரமமின்றி முருகனை தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்வதற்கான வேலையை செய்யாமல், போலீசார் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தரிசனம் செய்ய வைப்பதில் மட்டுமே குறிக்கோளாக இருந்தனர். இந்த விசயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு தொடர்பான பணிகள் உள்ளிட்ட அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படும். அப்படி இருக்கும்போது, பழனியில் தைப்பூசம் நெருங்கி வரும் சமயம் பார்த்து அவசர அவசரமாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி சார் ஆட்சியர் கிஷன் குமாரை பணியிடை மாற்றம் செய்ததால் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சரவணனுக்கு தைப்பூச நாளன்று மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகள் எதுவும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே பல குழப்பங்களும், குளறுபடிகளும் நிகழ்ந்தது.

அதேசமயம் பழனியில் தைப்பூச நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் பழனியில் பல இடங்களில், மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. டாஸ்மாக் விடுமுறை தினத்தன்று மது விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்தனர். மதுப்பிரியர்கள் பல இடங்களில் குடித்து விட்டு பாட்டில்களை சாலையோரத்தில் போட்டு சென்றனர். இதனால் கோயிலுக்கு பாதையாத்திரையாக வந்த பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தளவில் சாதாரணமான நாட்களிலேயே வாகன விபத்துகள் அதிகமாக நடக்கும். டாஸ்மாக் விடுமுறை விடப்பட்ட நாளான தைப்பூச நாளன்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எழுவதற்கு காரணமாக கூடும். இரண்டு சக்கர வாகனத்தில் மதுபோதையில் அதிக வேகத்தில் வருவதால் பக்தர்கள் பலரும் பாதிக்கப்படுவார்கள். இதனால் காவல்துறைக்கு கூடுதல் தலைவலி ஏற்படும் என்பதையும் கூட மதுவிலக்கு போலீசார் மறந்து போனது எப்படியோ.? இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி நகராட்சி நிர்வாகத்திற்கும், பழனி கோயில் நிர்வாகத்திற்கும் ஏற்கனவே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிசிடிவி கேமரா தொடக்க விழா பழனி அடிவார காவல்நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு கண்காணிப்பு அறையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய பழனி நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, பழனி கோவில் கேட்கும் அனைத்து பணிகளையும் பழனி நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது. ஆனால், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கோயில் நிர்வாகம் தகுந்த மரியாதை அளிப்பதில்லை.

பழனி வாழ் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணியில் அடிவாரம் கிரி வீதியில் 800 மீட்டர் தூரமுள்ள பகுதியில் குழாய் பதிக்க நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு, கோவில்நிர்வாகம் தடையாக இருக்கிறது. அதுசம்பந்தமாக கோயில் நிர்வாகத்திடம் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பலமுறை பேசிவிட்டார். ஆனால், அவருடைய பேச்சுக்கும் கோவில் நிர்வாகம் மதிப்பளிக்கவில்லை. இதனால், நகரமன்ற உறுப்பினர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்த்து விட்டனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என நகரமன்ற தலைவர் உமாமகேஸ்வரி அமைச்சர் முன்னிலையில் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு நிலவியது. பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கே இந்த நிலையா என அங்கிருந்தவர்கள் முனுமுனுத்தனர்.
பழனி மலையடிவாரத்தை சுற்றி ஒன்பது வழித்தடங்களிலும் வாகனங்கள் உள்ளே வராமல் இருக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், இரும்பு குழாய்களால் ஏற்கனவே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தைப்பூசம் நாளன்று கூட்ட நெரிசலை காரணமாக வைத்து, அதே இடத்தில் தகர சீட்டுகளை கொண்டு அடைத்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை ஆதாரமாக வைத்து, கிரிவல பாதையில் உள்ள பல வழிகளை கோயில் நிர்வாகம் அடைத்து வைத்தது. இதனால் பாதயாத்திரை வந்த பக்தர்கள் எளிதாக நடந்து செல்லக்கூடிய வழித்தடத்தை அடைத்ததால், பக்தர்கள் இன்னும் அதிக தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் என பலரிடம் போலீசார் கடுமையாக நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. முருகனை தரிசனம் செய்ய வந்த பக்தர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் அடைத்து வைத்து நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்தனர். மலையை சுற்றியுள்ள அடிவார பாதையில் வெறும் கால்களில் கடும் வெயிலில், நடந்து வரும் பக்தர்களுக்கு தரையில் சாக்குகளால் ஆன ‘மேட்’ விரித்திருக்க வேண்டும். அல்லது தண்ணீரை தெளித்து கடும் வெயில் சூட்டை தனிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால், அதுபோன்ற எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. பக்தர்கள் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டால், அவசர உதவிக்கு முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் முதலுதவிக்கான ஏற்பாடுகள் செய்யாததால் அவசரத் தேவைக்கு பக்தர்கள் பலரும் சிலருடைய உதவியை நாட வேண்டி இருந்தது. மலையில் மீதுள்ள முருகனை தரிசனம் செய்துவிட்டு ஊர் திருப்பும் முருக பக்தர்கள் பிரசாதமாக வாங்கி செல்லும் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மணிநேரம் காத்திருந்தும் பலருக்கு பஞ்சாமிர்தமும் கிடைக்கவில்லை.

இதற்கு முன்பு பழனி கோயிலில் இணை ஆணையராக இருந்தவர்கள் இதுபோன்ற ஏற்பாடுகள் அனைத்தையும் செய்திருந்தனர். இப்போது பணியில் இருக்கும் இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் அப்படியான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை பழனி கோயில் நிர்வாகம் மறந்து விட்டது. பழனி நகராட்சி நிர்வாகத்திடம் கோயில் நிர்வாகம் ஒத்து போகாததால், நகராட்சி நிர்வாகம் கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. இதனால் பழனிமலை அடிவாரத்தை சுற்றிலும் அதிகளவில் குப்பைகள் தேங்கியது. குப்பை கழிவுகளால் அதிக துர்நாற்றம் வீசத்துவங்கியது.
இரண்டு நிர்வாகங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனைகளால் பக்தர்கள், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இதுபோன்ற நிர்வாக குளறுபடிகளை சரி செய்யாமல் இன்னும் வேடிக்கை பார்த்து வருவது பொதுமக்களுக்கு ஏமாற்றமே.! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் எத்தனை தை வந்தாலும் முருகன் அருள்பாலிக்கும் பழனிக்கு வழி பிறக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் , நிர்வாக குளறுபடிகளாலும் இந்த ஆண்டு தைப்பூச நாளன்று பழனி நகரமே திக்குமுக்காடி போனது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.