கமல் விவகாரத்தில்.. ரஜினி குரல் கொடுக்காதது ஏன் ? இன உணர்வா !.? பயமா !.?

சென்னையில் நடைபெற்ற “தக் லைஃப்” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் மீது கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமாரே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

அந்த நெகிழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய கமல்ஹாசன், டாக்டர் ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும், அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும், சிவராஜ்குமார் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும், உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக, ‘அவர் குடும்பத்தில் தமிழனான எனக்குப் பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார்’ என்னும் பொருள்பட பேசினார். சிவராஜ்குமார் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு கன்னட மொழி பற்றாளர்கள் ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல், அந்த தவறான புரிதலை வேகமாக பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது, தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறி கன்னட மக்களை கமல்ஹாசன் அவமதித்து விட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. தக் லைஃப் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம் என அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பெரிய தமிழ் நடிகர்களின் படங்கள் வரும்போது, அதை வைத்து நெருக்கடி கொடுத்து தொல்லை தருவதை சில உள்நோக்கம் கொண்ட கன்னட அமைப்புகள் காலங்காலமாக செய்து வருகின்றன.

இந்நிலையில், கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கன்னட அமைப்புகள், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்த நிலையிலும், கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் கர்நாடகாவில் “தக் லைஃப்” படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது என நீதிபதி கேட்டுள்ளார். பின்னர் கமல்ஹாசன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை கொடுத்ததும் அதனை ஏற்றுக் கொண்டு, வர்த்தக சபை, கன்னட அமைப்பினர், கமல்ஹாசன் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதில் என்ன விநோதம் என்றால், தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு, திட்டமிட்டு பொது அமைதிக்கு கலங்கம் ஏற்படும் வகையில், ஒருசில இனவெறி கும்பல் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கு தாக்கல் செய்தால், பாதுகாப்பு வழங்க வேண்டிய கர்நாடக அரசும், நீதிமன்றமும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்திய சினிமாவின் உச்சபட்ச நடிகராக திகழும் தமிழரான கமல்ஹாசனுக்கு, அரசியல் கட்சியினரும், தனியார் அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கருத்து தெரிவித்து வரும் சினிமா பிரபலங்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காதது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமா மேடைகளில் கமல்ஹாசன் பற்றி பேசும்போதெல்லாம், கலையுலக அண்ணா என்றும், நீண்டகால நண்பர், தனக்கு சீனியர் என்றும் பேசுவார். கமல்ஹாசன் படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் நிகழும் போது, தன்னை வாழவைத்த தமிழ் சினிமா துறையில், சக நடிகரின் படத்திற்கு பிரச்சினை வரும்போது, குரல் எழுப்பாமல் மௌனம் காப்பது எதனால் என்கிற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ரஜனிகாந்த் குரல் கொடுக்காமல் மௌனம் காப்பதற்கு, சிலநாட்களில் தனது ஜெயிலர்_2 படம் வெளியாகும் போது பிரச்சினை வரும் என்பதாலா ? அல்லது இன உணர்வா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
_ சூரியன்