முதல்வரா… துணை முதல்வரா.. !.? குழப்பத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வரை வரவேற்றனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபானி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பெ. செந்தில்குமார், காந்திராஜன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட ஆட்சியர் சரவணன் வரவேற்று பேசினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, தமிழக முதல்வர் என குறிப்பிட்டு வரவேற்றார். இதனால் மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் மாவட்ட ஆட்சியரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனையடுத்து ஆட்சியர் சரவணன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், ஆட்சியர் பேசியதை விமர்சனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள், கனிமவள கொள்ளைகள் குறித்து எத்தனை முறை புகார் கொடுத்தாலும் ஆட்சியர் அதனை கவனிப்பது இல்லை. ஆனால், திமுகவுக்கு மட்டும் தனது விசுவாசத்தை காட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஐஏஎஸ் படித்த ஆட்சியருக்கு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வித்தியாசம் தெரியவில்லையா ? என பலரும் கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.




