வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய அதிமுக வேட்பாளர் ! சாதியம் பேசிய வழக்கில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 ஆண்டு சிறை !

2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே உள்ள காப்பிலியபட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதி ஒக்கலிக கவுண்டர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு மைக்கை பிடித்த சீனிவாசன், உற்சாக மிகுதியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, “நீங்களெல்லாம் ஒக்கலிக கவுண்டர்கள்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொங்கு வேளாளர் கவுண்டர்.. எனவே நம் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் மீண்டும் முதலமைச்சர் ஆகப்போகிறார். அதனால் நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்” என வெளிப்படையாகவே சாதிப்பெயரைச் சொல்லி பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மத ரீதியாக வாக்கு கேட்பது தேர்தல் நடத்தை விதிகளின்படி கடும் குற்றம். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக, விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றது. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல்முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையுடன் திண்டுக்கல் தாலுகா போலீசார் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) போட்டுள்ளனர். வழக்கு விவரம்: FIR எண்: 245/2026 பிரிவு: 196(1) BNS (பாரதிய நியாய சன்ஹிதா) இந்த குற்றப் பிரிவின் படி, மதம், ஜாதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே பகைமையை உருவாக்குதல் என்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டமான BNS-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் பிரிவு மிகக் கடுமையானது.

இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், இது பிணையில் வர முடியாத (Non-Bailable) குற்றமாகும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தேர்தல் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என திண்டுக்கல் சீனிவாசன் மீது ஏற்கனவே பல புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இப்போது ‘சாதிப் பேச்சு’ வழக்கும் சேர்ந்து கொள்ள, தேர்தல் களத்தில் அதிமுக தரப்பு சற்று கலக்கத்திலேயே இருக்கிறது. “வாயைத் திறந்தாலே வம்பில் முடிகிறதே…” என அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களே புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். தேர்தல் நேரத்தில் போடப்பட்ட வழக்கு என்பதால் தேர்தல் கமிஷனின் ஆக்ஷன் எப்படி இருக்கும் ? என பொறுத்திருந்து பார்ப்போம் !




