அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாப்பாடி, முத்தநாயக்கன்பட்டி, கொழுமம் கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மட்டை மில், பேப்பர் மில்களுக்கு அனுமதியில்லாமல் தண்ணீர் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுசம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது.., தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீரை வெளியே விலைக்கு வாங்க வேண்டிய சூழலில், இங்குள்ள சில மட்டை மில், பேப்பர் மில் நிறுவனங்கள் அனுமதியின்றி தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக பத்துக்கும் மேற்பட்ட பைப் லைன்கள் போடப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பழனி வட்டாட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கூறி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டாட்சியரிடம் ஃபார்ம் நம்பர் 6, சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக ஃபார்ம் நம்பர் 7 வழங்கி உள்ளதாகவும். விரைவில் சட்டத்திற்கு புறம்பாக போடப்பட்டுள்ள குழாய்கள் அகற்றப்படும் என தெரிவித்தார்.

திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் விதமாக அமராவதி ஆறு இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நிறுவனங்கள் மட்டுமல்லாது தென்னை வளர்ப்பு விவசாயிகள் சிலர் மட்டை மில் நடத்தி வருகின்றனர். தென்னை சம்பந்தப்பட்ட தொழிலுக்கு தண்ணீர் முக்கிய தேவையாக இருந்து வருகிறது. அதன் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு அதிகரித்து வருகிறது. நேரடியாக அமராவதி ஆற்றில் குழாய் பதித்தும், சிலர் ஆற்றங்கரை அருகில் கிணறு தோண்டி அதில் நீரை தேக்கி அங்கிருந்து தனியார் நிறுவனங்களுக்கு குழாய் மூலமாக தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

இதுசம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, அமராவதி ஆறு அருகிலேயே இருந்தாலும் நல்ல தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. போர் தண்ணீர் தான் இங்குள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சில தனிநபர்கள் அவரவர்கள் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீரை எடுத்து செல்கின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க எந்த முகாந்திரமும் இல்லை. சுமார் நூற்றுக்கணக்கான குழாய் மூலமாக தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது. ஆரம்பத்தில் சில நடவடிக்கைகள் பெயரளவில் இருந்தாலும் தற்போது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தண்ணீர் திருட்டில் அதிகளவில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தண்ணீரை விற்பனையும் செய்து வருகின்றனர்.
இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக போடப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




