தமிழகம்

பழனி கோயில் அடிவாரத்தில் நிலவும் சிக்கல்… : வியாபாரிகள், குடியிருப்பாளர்கள் போராட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனிக்கு, நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகாமையில் சுற்றுலாத்தலமான கொடைக்கானல் இருப்பதாலும், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், வியாபாரிகள் என எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அதனால், பழனி மலை மற்றும் அதையொட்டி இருக்கும் பழக்கடைகள், ஹோட்டல்கள், கயிறு, சாமி படங்கள், பாசி உள்ளிட்ட பொருள்கள் விற்பனையை நம்பியே 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் வியாபாரிகளும், அடிவார கிரிவீதி பகுதி மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது. அதில், “பழனி அடிவாரம் கிரிவீதிபகுதியில் தனியார் வாகன நிறுத்தங்கள், விற்பனை கூடங்கள், கடைகள் என ஏதும் நடைபெறகூடாது. அடிவாரப்பகுதியினுள் நுழையும் நான்கு வாயில்களையும் கம்பிகள் வைத்து அடைக்க வேண்டும். மேலும், கிரிவீதி பகுதியில் பக்தர்களுக்கு இடையூறாக இனி யாரும் வியாபாரம் செய்யக்கூடாது. அடிவாரம் முழுவதும் பட்டா இல்லாது ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிவாரம் பகுதியிலுள்ள அண்ணா செட்டி மடத்தில் இருக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்து அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், பழனி முருகன் கோவிலின் தேவஸ்தானம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிவாரப்பகுதியில் விற்பனை செய்து வரும் சிறு, குறு வியாபாரிகளின் கடைகளை அகற்றி, வெளி வாகனங்கள் உள்ளே வர இயலாதவாறு கிரிவீதி முழுவதையும் கம்பிகள் வைத்து தடுத்திருக்கிறது. மேலும், “கிரிவீதியில் இனி யாரும் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும்” என நோட்டீஸும் கொடுத்தது.

இதனால் பெரிதும் அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்த சிறு, குறு வியாபாரிகள் தேவஸ்தான அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். ஆனால் தேவஸ்தானம், “எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத்தான் செயல்படுத்தியிருக்கிறோம்.” என நழுவியது. இந்த அதிர்ச்சியை ஜீரணிப்பதற்குள், மற்றொரு பேரிடியாய் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிவாரம் பகுதியிலுள்ள அண்ணா செட்டி மடத்தில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்றியது தேவஸ்தானம்.

இதனால் கொதித்தெழுந்த மக்கள் “எங்களை வியாபாரம் செய்யக்கூடாது என்று அடிவாரத்தை விட்டு துரத்தினார்கள். தற்போது நாங்கள் வாழக்கூடாது என்று 50 ஆண்டுகளாய் ரத்தமும் சதையுமாக நாங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து எங்களை அப்புறப்படுத்தினார்கள். தற்போது, பாத்திர பண்டங்கள், குழந்தைகளோடு நடுத்தெருவில் போக்கிடம் இன்றி நிற்கதியாய் நிற்கவைத்திருக்கிறார்கள். எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம் சில நிபந்தனைகளுடன், பழனி மலைக்கு பின்புறம் உள்ள குறவன்பாறை பகுதியில் பட்டா வழங்கியது தேவஸ்தானம்.

ஆனால் அந்தப் பகுதிமக்கள், “குறவன்பாறை பகுதி கல்குவாரி. பள்ளங்கள் இருந்த பகுதியை அவசரகதியில் மண்ணை போட்டு முடி எங்களுக்கு மாற்று இடமாக தர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மழைபெய்தால் வீடுகள் மண்ணுக்குள்ளே புதைந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. மேலும், வழங்கப்பட்ட பட்டாவில் நிரந்தர கட்டடம் கட்டக்கூடாது. தகர கொட்டகைகளை மட்டுமே அமைத்து தங்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தேவஸ்தானம் சார்பில் ஒதுக்கப்பட்ட மாற்று இடம் எங்களுக்கு வேண்டாம். பழனியின் பூர்வகுடிகளான எங்களுக்கு, நிலையான குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்” என மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் “முத்தமிழ் முருகன் மாநாடு” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். அப்போதே மாவட்ட ஆட்சியர் போராட்டக்காரர்களை சந்தித்து குறைகளை கேட்பதாக வாக்களித்தார். இதை நம்பிய அந்தப் பகுதி மக்கள், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

ஆனால், முத்தமிழ் முருகன் மாநாடும் நடந்து முடிந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அதனால், போராட்டக்காரர்கள் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற தங்களுடைய அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்டக்காரர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், போராட்டக்காரர்களில் 20 நபர்களை மட்டும் ஆட்சியர் சந்தித்து பேசினார். அப்போது, “என்னால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. உங்களுக்கான தீர்வுக்கு நீதிமன்றத்தை நாடுங்கள். அதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், “எங்களின் வாழ்வாதாரம் பழனி மலையை நம்பியே இருக்கிறது. குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள், பள்ளி – கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் என அனைவருமே இதிலிருந்து வரும் வருமானத்தையே நம்பி இருக்கிறோம். இப்படி அடி மடியிலேயே கைவைத்தால் நாங்கள் எங்குபோவது. இந்த வருமானத்தை நம்பி, அவசரத் தேவைகளுக்காக வட்டிக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு வகையில் பொறுப்புகளை சுமந்திருக்கிறோம்.

இனி கடனுக்கு வட்டி கட்டுவதா… குழந்தைகளின் கல்விச் செலவை கவனிப்பதா… மருத்துவ செலவுகளை பார்ப்பதா என திக்குத் தெரியாத காட்டில் சிக்கியிருப்பதை போல உணர்கிறோம். குழந்தைக்கு பால் வாங்ககூட வழியற்று நிற்கிறோம். எங்களுக்கு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுங்கள் இல்லையேல் நீங்கள் தரும் 16 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சீனியை நீங்களே வைத்துக்கொண்டு, எங்களை கொன்று விடுங்கள்” என அழுகையாலும், இயலாமையலும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்கிறார்கள்.

ஆனால், “இந்த விவகாரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்பதால், மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செய்யமுடியாது. அப்படி அவர்கள் எதாவது செய்தால் அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். எனவே போராட்டக்காரர்களை வழித்தவறச் செய்யாமல், மடைமாற்றாமல், நீதிமன்றத்தை நாட வழி செய்வதே இதற்கான ஒரே தீர்வு” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button