இந்தியா

பொருளாதார நெருக்கடியில் கடனில் மூழ்கும் இலங்கை…

கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பயண நினைவுகள்

இலங்கை இந்தியாவிடம் கடன் கேட்டுள்ளது. பேரீச்சை பழத்துக்கான 200 ரூபா வரியை ரமலான் நோன்பை முன்னிட்டு 199 ரூபா என இலங்கை அரசு குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வேடிக்கை தனமனது. ரூ 200க்கும் 199 என்ன வித்தியாசம். இது ஒரு விலை குறைப்பா?
முக்கியமான மற்றும் அத்தியாவசியமான 12 பொருட்களின் விலை 338 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் உழைத்து வாழும் தொழிலாளர்க்கு தொழில் இல்லை, வருவாய் இல்லை. மேற்படி பொருட்களின் விலைகள் 338 % அதிகரித்தால் தின வருவாயும் ஆக அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

அப்படியென்றால் நம்நாடு சோமாலியாவை நோக்கித்தான் நகர்கிறது. உகண்டாவில் இடியமீனின் ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு நாளும் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகத் தகவல் உண்டு.
இந்த அவலத்திலும், முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் மணலாறு திருப்பும் மூன்று சந்தியில், சைவர்கள் விரும்பும்வேம்பு மரம் வெட்டப்பட்டு புத்த மதஅடையாளமான போதி மரம் நாட்டப்பட்டுள்ளது. வேப்ப மரம் போதி மரமாகி விட்டதோ? அதனால்தான் போதி மரத்தின் சில்லென்ற காற்று இவ்வளவு கசப்பாக உள்ளதோ?

மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை அதிபரை கோட்பயவை சந்தித்தார். பசிலும்சந்தித்தார். திரும்பவும் இந்தியாவிடம் கடன் உதவி கேட்டுள்ளனர்.உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியது போதுமானது அல்ல என இலங்கை சார்பில் சொல்ல பட்டதாக தகவல்.


இந்த ஆண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் -வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்த வேண்டும்.

பல தசாப்தங்களாக இலங்கையில நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகக் கையாளுகையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும்.
சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே ஏற்று இருந்தால் நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும்.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட அரசாங்கங்கள் அரசியல் பிரச்சினைக்கு இராணுவ தீர்வையே தேர்ந்தெடுத்தன. உண்மையில், அதுவே இன்றைய பேரழிவுகரமான கடன் நெருக்கடிக்குள் அந்த நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.
வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால், பல ஆண்டுகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்துடன் நடாத்தப்பட்ட அரச பயங்கர யுத்தமானது இன்று தீவு நாட்டின் அனைத்து சமூக மக்களினதும் தோள்களில் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும் சுமத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னருங்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை. மாறாக ராஜபக்சே பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட அப்போதைய அரசாங்கம், தமிழ் மக்களை போரில் வெற்றிகொண்டுவிட்டோம் என்கின்ற மனப்பான்மையுடன் தொடர்ந்தும் எமது நாட்டை ஆட்சி செய்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தியது. அதுவே, அந்நேரத்தில் பெரும் ஆற்றலையும் விருப்பத்தையும் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதை தடுத்திருத்தது.

2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கலாம். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வொன்றை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் காணப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ்பக்சே தமிழ் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் உட்பட பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கும் உறுதியளித்திருந்தார். அவர் அதனைச் செய்திருந்தால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பார்.

முன்னாள் அதிபர் மஹிந்தா நாட்டின் மிக சக்திவாய்ந்த மனிதராக இருந்தபொழுது, அரசியல் தீர்வுக்கான சாத்தியமான யோசனையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினால் முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஓர் அரசியல் தீர்வு இருந்தது. அதனை இந்த நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்த மஹிந்த அமுல்படுத்தியிருக்கலாம்.

அவர் வாக்குறுதியளித்தபடி 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண விரும்பாவிட்டாலும், குறைந்தபட்சம் 13வது திருத்த வரைபை, அதன் ஆரம்ப அசல் வடிவிலேயே முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கான துணிவு அவருக்கு இருக்கவில்லை. நாட்டில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆற்றலுடன் இருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களுக்கு உரிய இடத்தினை வழங்க அரசாங்கம் முன்வராததால் விலகி நிற்க முனைந்தனர்.

இதற்கிடையில், நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மேம்படுத்தப்பட்ட இந்த அதிகாரிகளின் சிங்கள பௌத்த பெரும்பான்மை மனோநிலை, அந்த முதலீட்டாளர்களின் பெரும் உற்சாகத்தை சிதைத்துவிட்டது. முதலீட்டாளர்கள் மீது சுமத்தப்பட்ட தாங்க முடியாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சுமைகள் அவர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வசிக்கும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது.

சில முதலீட்டாளர்கள் நாட்டின் தென்பகுதியிலேயே முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தனிப்பட்ட முறையில், இதுபோன்ற சில சம்பவங்களை நான் அறிவேன். மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள்பற்றி; எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய ஆட்சிமுறை என்கின்ற நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரை, ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான பரிந்துரையாக குறைந்தபட்சம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் ஆரம்ப வடிவிலேயே, முழுவதுமாக செயல்படுத்துமாறு தற்போதைய பொருளாதார அவலநிலையில் இருந்து நமது நாட்டை மீட்பதற்கான ஒரே வழி.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக அயலக கண்காணிப்பில் நடுநிலையான ஒரு பொது வாக்கெடுப்பு (Referandum) வேண்டும். இதுவே தீர்வு.

— கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button