தமிழகம்

உயிரோடு இருக்கும் தொழிலதிபருக்கு இறப்புச் சான்றிதழ்.. 10 கோடி சொத்தை அபகரித்த இருவர் கைது..!

சேலம் மாநகர், சொர்ணாம்பிகை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அஜய் குமார் (49). இவர் ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனை சந்தித்து புகார் ஒன்றினை கொடுத்தார்.

அதில் தனக்கு ஓமலூர் அடுத்துள்ள காடையாம்பட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தை, நான் இறந்து விட்டதாகவும், எனக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும் போலி சான்றிதழ்கள் தயாரித்து சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

மேலும் அந்த சொத்தினை விற்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே நான் இறந்து விட்டதாகவும், எனது சொத்தை வாரிசுகளுக்கு கொடுத்ததாகவும் போலிச் சான்றிதழ் தயாரித்து சொத்தினை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்து இருந்தார்.

இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி அருண் கபிலன் உத்தரவிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி இளமுருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமரன், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தொழிலதிபர் அஜய்குமாரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்க முயற்சி செய்து வருவது உறுதியானது.

இதனையடுத்து ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி வகுத்தானூரை சேர்ந்த தம்பிதுரை, சேலம் பொம்மியம்பட்டி அருகே உள்ள சுண்டைக்காப்பட்டியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நல்லதம்பி ஆகிய இருவரும் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் அஜயகுமாரின் வாரிசுகளாக இந்துஜா, லோகநாயகி என இரண்டு பெண்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து சொத்தை அபகரித்தது உறுதியானது. இதனையடுத்து தம்பிதுரை, நல்லதம்பி, இந்துஜா, லோகநாயகி ஆகியோர் மீது போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தம்பிதுரை மற்றும் நல்லதம்பி ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளாக 10 கோடி ரூபாய் நில சொத்தை அபகரிக்க பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

அஜய் குமாரின் 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முடிவு செய்த தம்பிதுரை மற்றும் நல்லதம்பியும், முதலில் 2007 ஆம் ஆண்டு அஜய்குமார் இறந்ததாக சேலம் அரசு மருத்துவமனையில் சான்று பெற்றுள்ளனர். பின்னர் அதனை சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து, இறப்புச் சான்று பெற்றுள்ளனர்.

பிறகு அஜயகுமாரின் வாரிசுகளாக தம்பிதுரையின் மனைவி லோகநாயகி மற்றும் இந்துஜா என்ற பெண் ஆகிய இருவர் பெயரிலும் வாரிசு சான்றிதழ் வாங்கி உள்ளனர். அதன் பின் அந்த ரெண்டு ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனதாக பெங்களூரு போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பத்திர அலுவலகம் மூலம் அஜய்குமாரின் ஆவணங்களை பெற்று, பாகப்பிரிவினை வழக்கை ஓமலூர் நீதிமன்றத்தில் நடத்தியுள்ளனர்.

அங்கு பாகப்பிரிவினை உத்தரவை பெற்று, அந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை விற்க முயற்சி மேற்கொண்டு ஒரு சிலரிடம் முன் பணத்தை பெற்றுள்ளதாவும் கூறப்படுகிறது. அட்வான்ஸ் பணத்தை கொடுத்தவர்கள் நிலத்தை பார்க்க வந்த போது தான் அந்த இடம் அஜய்குமார் என்பவருக்கு சொந்தமானது என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அஜய்குமாருக்கும் தகவல் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் விசாரித்த போது தான் இறந்துவிட்டதாக போலி இறப்புச் சான்றிதழ் பெற்றதுடன், தனது வாரிசுகளாக இரண்டு பெண்களின் பெயரில் வாரிசு சான்று பெற்று, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, நிலத்தை அபகரித்தது தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

அதனை அடுத்து உடனே புகார் கொடுத்ததின் பேரில் தற்போது தம்பிதுரையும், நல்லதம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் லோகநாயகி என்பவர் தம்பிதுரையின் மனைவி ஆவார். இந்துஜா என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்கள் இருவருக்கும் தெரிந்து தான் இந்த மோசடி நடைபெற்றுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட தம்பிதுரை மற்றும் நல்லதம்பி ஆகிய இருவரையும் குற்றவியல் நடுவர் எண் ஆறில் ஆஜர்ப்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் இருவரையும் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button