சினிமா

“லியோ” வில் சிகரெட் புகைக்கும் காட்சியை நீக்காவிட்டால்…., எச்சரிக்கும் காடுவெட்டி குருவின் மகள்

தமிழகத்தில் குறிப்பாக வடமாவட்டங்களில் அதிரடி அரசியல்வாதியாக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. இவரது சொந்தப் பெயர் ( ஜே.குருநாதன் ) ஜே.குரு என எல்லோராலும் அழைக்கப்பட்டார். வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக வலம் வந்த காடுவெட்டி ஜே.குரு-வின் மகளான குரு. விருதாம்பிகை தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னனி நடிகரான தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தில் வரும் ஒரு காட்சியை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,

சகோதரர் நடிகர் ஜோசப் விஜய் அவர்களே ( LEO ) லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறீர்கள். உங்களின் பிறந்தநாள் ஜூன் 22 அன்று ‘நான் ரெடி’ என்ற வரிகளை கொண்ட பாடலை ‘லியோ’ பட குழுவினர்கள் வெளியிடப் போவதாக அறிவிப்பினை சமூக வலைதளம் மூலமாக அறிவித்திருப்பதை அறிந்தேன். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு போட்டோவில், நீங்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியானது இடம் பெற்று இருப்பது தவறான முன் உதாரணமாகும்., இது கண்டிக்கத்தக்கது. உங்களை பல லட்சம் ரசிகர் பட்டாளங்கள் பின் தொடர்கின்றனர். உங்களைப் பின்தொடர்பவர்கள் 1990, 2000 ஆண்டுகளைச் சார்ந்த இளைஞர்களாக, மாணவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் தற்போதுள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடும்ப சுமை காரணமாக தனது வாழ்க்கையை நடத்த வேலைக்குச் செல்பவர்களாகவும், பலர் உங்களைப் போன்ற நடிகர்களை தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அறியாமலோ நமது இளைஞர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றனர்.

மேலும் சினிமா கொட்டகைகளில் தங்களின் தலைவர்களை தேடுவதை இன்றளவிலும் வாடிக்கையாக இருந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்கு தடை ஏதும் இல்லை., சகோதரர் விஜய் அவர்களே உங்களைப் பின் தொடரும் நம் இளைஞர்கள் நம் தலைவன் விதவிதமாக சிகரெட் பிடிக்கிறார் நாமும் அவ்வாறு செய்யலாம் என்று நினைக்க அதிகமான வாய்ப்பு உண்டு.! சினிமாவின் தாக்கம் இன்று மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படத்தில் யாரோ ஒரு நடிகர் சிகரெட் புகைப்பதால் நாட்டில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெடும் என்ற சொந்த வாதங்களை சிலர் பேசலாம்., ஆனால் நீங்கள் யாரோ ஒரு முகம் தெரியாத நடிகர் அல்ல நாளை தமிழகத்தை ஆள வேண்டும் என்ற முனைப்பில் சரியாக காய் நகர்த்தி வரும் முன்னணி நடிகர்.! ‘உங்கள் துறையில் நீங்கள் தான் டாப்..!’

உங்கள் துறையிலிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக முன்பு ஒரு காலகட்டத்தில் ஆனவர் தனது படங்களில் சிகரெட் , மது , அருந்துவது , போன்ற காட்சிகளில் நடிக்காமல் சமூக ஒழுக்கத்தோடு நடித்து வாழ்ந்தார். அப்படி பல நடிகர்கள் அந்த காலகட்டத்தில் உங்கள் துறையில் இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் இன்று உங்களை பார்த்து சில ரசிகர்கள் பாதிக்கப்பட்டாலும் இது உங்களுக்கு ஏற்பட்ட அவமானம், இதனால் அந்த ஒரு ரசிகர் மட்டுமே பாதிக்கப்பட போவதாக இல்லை., பாதிக்கப்பட்ட ரசிகர் ஒருவர் தாய்க்கு மகனாக இருக்கலாம் , ஒரு பெண்ணிற்கு கணவனாக இருக்கலாம் , ஒரு குடும்பத்தை தாங்கும் மூத்த அண்ணனாகவும் இருக்கலாம் இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும்.

ஒரு ரசிகர் ஒரு நாளைக்கு குறைந்தது 5 சிகரெட் புகைப்பதாக வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவாகிவிடும் இதனால் அந்த ரசிகனின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். தன் தலைவன் திரைப்படம் வந்தால் பால் அபிஷேகம் செய்வது , கட்டவுட் வைப்பது , முதல் காட்சியில் 2000 ரூபாயாக இருந்தாலும் கடன் வாங்கி படம் பார்ப்பது , தங்கள் பிள்ளைகளுக்கு உங்களின் பெயரை வைப்பது உங்களின் பிறந்த நாளில் மக்களுக்கு சேவை செய்வது என்று உங்களுக்கு உயிரை கொடுக்க நினைக்கும் அந்த ரசிகனுக்கு நீங்கள் நல்ல கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 22 உங்களின் பிறந்த நாளை முன்னிட்டு உதவிகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு நீங்கள் நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும் நீங்கள் தற்போது நடித்து வரும் ‘லியோ’ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே புகை பிடிப்பது போன்ற காட்சி இருந்தாலும் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமூகத்தின் மீது அக்கறை இருந்தால்
நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button