தமிழகம்

தமிழ்நாட்டின் உரிமையை சிறுவாணியில் நிலைநாட்ட முதலமைச்சரின் குரல் ஒலிக்குமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நகமும் சதையும் போல நெருக்கமாக உறவாடி வருகிறார். கேரளத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்த காட்சிகள் அரங்கேறின என்பது அனைவருக்கும் தெரிந்ததே. என்றாலும், கேரளா தொடர்ந்து முல்லைப் பெரியாறு, நெய்யாறு உட்பட பத்துக்கும் மேலான நதி நீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் இருக்கிறது. இது ஸ்டாலினுக்குப் புரியுமோ, புரியாதோ? என முன்னாள் எம்.பி. கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே கூலிக்கடவில் சிறுவாணியில் தடுப்பணை பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. இதனால் கோவை வட்டாரத்துக்கு வர வேண்டிய தண்ணீர் தடைபடும். காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி பவானியில் 66 டிஎம்சி தண்ணீரைக் கேரளா எடுத்துக் கொள்ளலாம் என்ற பிரச்னை கடந்த 2007-2008 ஆம் ஆண்டில் வந்தபோது, இங்கு திமுக அரசுதான் இருந்தது. அப்போது துரைமுருகன் பொதுப் பணித்துறை அமைச்சர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே நரசிம்மலு நாயுடுவின் வேண்டுகோளின்படி கோவைக்குத் தண்ணீர் வழங்க திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டது. சிறுவாணி அணையில் மழை பெய்தாலும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கும் மேல் தண்ணீர் நிரப்ப தமிழகத்தை கேரளா அனுமதித்ததும் இல்லை.

சிறுவாணி அணையிலிருந்து 1.3 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். இது குடிநீருக்குப் பயன்படுகிறது. இந்த தண்ணீரைத் தடுத்து இப்போது கேரளாவில் கட்டப்படுகிற தடுப்பணை 1.3 டிஎம்.சி கிடைக்க வேண்டியதையும் சேர்த்து கேரளா தன் உடமையை நிலைநாட்ட, எப்போதும் போல சண்டித்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறது. தமிழக முதலமைச்சருக்கு இந்த வியஷங்களை எல்லாம் சொல்லக் கூடிய அளவில் திமுகவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே இல்லையா? அவர் என்ன செய்வார்? களப்பணி செய்கிறவர்கள், அறிவுசார்ந்த புரிதலுள்ளவர்கள் கட்சியில் இருந்தால்தான் அவருக்குப் பிடிக்காதே!

விவரம் தெரிந்தவர்களும், களப்பணியாளர்களும் தன்னோடு இருக்க வேண்டும் என்று கலைஞர் நினைப்பார். ஆனால் பாசாங்கு காட்டும் புகழ்பாடிகள்தானே திமுக தலைவரிடம் இருக்கிறார்கள். இந்த சிறுவாணி தடுப்பணை பிரச்னையில் என்ன செய்யப் போகிறார்? சி.பி.எம் திமுக தோழமைக் கட்சிதானே? தமிழ்நாட்டின் உரிமையை சிறுவாணியில் நிலைநாட்ட ஸ்டாலினின் உரத்த குரல் ஒலிக்குமா? என கே.எஸ். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button