விமர்சனம்

தமிழகத்தை ஆள நினைக்கும் மணல் மாஃபியா !.?

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பத்து தல”.

கதைப்படி… முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப், துணை முதல்வர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் ஒரு புதிய மருத்துவ திட்டம் துவக்கவிழாவில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்பதை மேடையிலேய ரகசியமாக பேசிக்கொண்டு, பொதுவெளியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கின்றனர். பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மருந்து கம்பனியிடன் போட்ட ஒப்பந்தப்படி பணம் வரவில்லை என்றால் நீ முதல்வராக இருக்க முடியாது என,  துணை முதல்வர் கௌதம் வாசுதேவ் மேனன் முதல்வரை மிரட்டுகிறார். 

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் பேசுவதற்காக எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் ரகசியமாக முதல்வர் சந்தோஷ் பிரதாப் காரில் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார். அப்போது ஒரு நான்கைந்து கார்கள் முதல்வரின் காரைப் பின்தொடர்ந்து, முதல்வரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, அவரது காரை ஒரு கண்டெய்னரில் ஏற்றி கடத்துகின்றனர். பின்னர் காலையில் முதல்வர் வீடு திரும்பாததால் தமிழ்நாடே பரபரப்புக்குள்ளாகிறது.

முதல்வரைத் தேடும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அவர்கள் விசாரணையில் கன்னியாகுமரியில் உள்ள மணல் மாஃபியா சிலம்பரசனின் ஆட்கள் கடத்தியிருப்பதாக தெரியவருகிறது. இந்தப் பணியில் கௌதம் கார்த்திக்கை சிபிஐ அதிகாரி சிலம்பரசன் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

முதல்வர் எதற்காக கடத்தப்படுகிறார் ? கௌதம் கார்த்திக் முதல்வரை கண்டுபிடித்து மீட்டு வந்தாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

படத்தின் பிற்பாதியில் சிலம்பரசன் வருகிறார். தமிழகத்தில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை கன்னியாகுமரியில் மணல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் சிலம்பரசன் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கிறார். மணல் கொள்ளையில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு அறக்கட்டளைகள் மூலம் உதவுகிறார். இவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பின்னர் அவரைப் போற்றும் போது, நல்லது செய்ய வேண்டுமானால் ஒரு கெட்ட முகம் தேவைப்படுகிறது என்கிறார்.

சிம்புவைப் பொறுத்தவரை ஆக்ஷன், சென்டிமென்ட், கருணை என பல்வேறு பரிமாணங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தனது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கௌதம் கார்த்திக் தோன்றுகிறார். இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் இருவரது கதாப்பாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

துணை முதல்வர் கதாப்பாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பாக நடித்துள்ளார். கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறார்.

ஒளிப்பதிவு, ஏஆர் ரகுமானின் இசை, சண்டைக் பயிற்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தியிள்ளனர்.

இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். வேறு மொழிக் கதைகளைத் தேர்வு செய்யும் போது, இங்குள்ள சூழ்நிலைக்கேற்ப கதையில் சில மாற்றங்களை செய்யத் தவறியிருக்கிறார். மாநாடு படத்தின் மூலம் மாபெரும் வசூல் சாதனை படைத்த சிலம்பரசனை சரியாகப் பயன்படுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button