தமிழகம்

பல்லடத்தில் மோசடி குடும்பத்தின் வில்லங்க விளையாட்டு : கோடிகளை இழந்து வீதிக்கு வந்த குடும்பங்கள்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை மையமாக வைத்து தமிழகம் முழுக்க கோடிக்கணக்கில் மெகா மோசடி செய்த குற்றப்பரம்பரையை சேர்ந்த தந்தை மகன், சித்தப்பன் செய்த வில்லங்க விளையாட்டால் கோடிக்கணக்கில் சொத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கவுண்டரின் மகன் சிவக்குமார். அண்ணன் விஜயகுமார் மற்றும் அண்ணன் மகன் ராகுல் பாலாஜி ஆகிய மூவரும் சேர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தொழில் பார்ட்னர்களாக ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்தை அபகரிப்பதோடு பட்டை நாமம் போட்டுவிட்டு கம்பி நீட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கடனில் தத்தளிக்கும் குடும்பத்தின் விபரங்களை இடைத்தரகர்கள் மூலமாக பெற்றுக்கொண்டு அவர்களை நேரில் சந்தித்து தன்னை தொழில் அதிபராக அடையாளப்படுத்திக்கொண்டு சொத்துக்கள் மீது கடன் பெற்றுத்தருவதாகவும், சொத்தை தன் மீது கிரையம் தந்தால் தனது தொழிலில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு மாதம் தோறும் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டித்தருவதாக ஆசைவார்த்தை கூறுவாராம்.

பின்னர் தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று நம்பிக்கை வரவழைப்பது போன்று பேசி நயவஞ்சகமாக சொத்தை சிவக்குமார் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு பைசா கொடுக்காமல் ஆட்டையப்போட்டு தலைமறைவாகிவிடுவது வழக்கம். இந்நிலையில் பல இடங்களில் குடும்ப பெண்களை மயக்கி சொத்துக்களை வலைத்துப்போட்டுள்ளார்.

விஜயகுமார் சொகுசு பங்களா

இது போன்று பல்லடம் மங்கலம் ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வந்த பிரவினாவின் 35 லட்சம் மதிப்பிலான வீட்டை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை பெற்றதோடு பிரவினாவை தன்னுடனே தொழில் பார்ட்னராக சேர்த்து பல இடங்களில் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன் (48), பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்க எண்ணி திருப்பூரை சேர்ந்த தமிழரசனை அணுகியுள்ளனர். பின்னர் தமிழரசன் சிவக்குமார் மற்றும் பிரவினாவுடன் சேர்ந்து நம்பிக்கையாக பேசி குமரேசன் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து 2 கோடி கடன் பெற்று குமரேசனுக்கு தராமல் மோசடி செய்ததோடு தனியார் பைனான்சிலும் ரூ. 15 லட்சம் பெற்று ஒரு தவணை கூட கட்டாமல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனிடையே பல ஆண்டுகளாக போராடி கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு 1102/2022 ஆக வழக்கு பதியப்பட்டு சிவக்குமார் மற்றும் பிரவினாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தமிழரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வங்கியில் அடமானம் வைத்து தவணைக்கட்டாத பிரவினாவின் வீட்டிற்கு சீல் வைத்த வங்கி நிர்வாகம்

இதனைத் தொடர்ந்து கோவை ஓனம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார், மனுவில் சிவக்குமார் தனது அண்ணன் விஜயகுமார் மற்றும் அண்ணன் மகன் ராகுல் பாலாஜி ஆகியோருடன் சேர்ந்து தொழில் பார்ட்னராக சேர்த்து விடுவதாக கூறி சவுரிபாளையத்தில் உள்ள ரூ. 55 லட்சம் மதிப்பிலான சொத்தை எழுதிவாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும், சொத்தை இழந்த நிலையில் கேன்சர் நோயாளியான தனது மனைவி உமா மகேஷ்வரியின் மருத்துவ செலவிற்காக தற்போது வாட்ச்மேன் வேலை செய்துவருவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் CR.No. 229/2023 ஆக வழக்கு பதியப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பி சிவக்குமார் அண்ணன் விஜயகுமார், அவரது மகன் ராகுல் பாலாஜி ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பனியன் கம்பெனி ஓனர் ரத்தினசாமி என்பரிடம் தனக்கு சொந்தமான தொழில்சாலையில் பார்ட்னராக சேர்த்துக்கொள்வதாக கூறி ரத்தினசாமியின் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. ஒன்னரை கோடி கடனும், ரூ. 65 லட்சம் பணத்தை பெற்று திரும்ப செலுத்தாமலும் சொன்னபடி பார்ட்னராக சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ரத்தினசாமி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே பாணியில் ஈரோடு பொன்முடியை சேர்ந்த ரங்கநாயகி என்பவருக்கு சொந்தமான சொத்தை அடமானம் வைத்து ரூபாய் 1 கோடியே 50 லட்சம் பெற்று மோசடி செய்ததோடு, தனது ஆவணங்களை பயன்படுத்தி விலை உயர்ந்த காரையும் கடனில் வாங்கி சிவக்குமார் தவணை கட்டவில்லை எனவும், ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ரூ. 3 கோடியே 75 லட்சமும், திருப்பூரை சேர்ந்த பால் வியாபாரி பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 4 கோடி என சுமார் 15 கோடி அளவிற்கு சிவக்குமார், விஜயகுமார், ராகுல்பாலாஜி மற்றும் பிரவினா, தமிழரசன் ஆகியோர் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

இந்நிலையில் வங்கிகளில் அப்பாவிகளின் சொத்துக்களை மோசடி குடும்பத்தைச் சேர்ந்த சிவக்குமார், விஜயகுமார் மற்றும் மகன் ராகுல் பாலாஜி ஆகியோர் சிலீப்பர் செல்களாக பலரை நியமித்து வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகவும், தொழில் பார்ட்னராக ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி மெகா மோசடி மன்னர்களை தேடி பாதிக்கப்பட்டவர்கள் வேலப்பநாயக்கன்பாளையம், வடுகபாளையம், பல்லடம் காவல்நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பல்லடம் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் என பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து தாங்கள் இழந்த சொத்தை மீட்டுத்தரக்கோரி மனம் தளராது போராடி வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கை பொறுத்தவரை வங்கி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை மோசடி குடும்பத்தினரின் வில்லங்க விளையாட்டிற்கு முடிவு கட்டி கோடிக்கணக்கான சொத்துக்களை மீட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button