செம்மண் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?.!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பெரியம்மாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மண் திருட்டு நடப்பதாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெரியம்மாபட்டி கிராமத்தில் சர்வே எண்: 441/4 இல் அரசுக்கு சொந்தமான உபரி நிலத்திலிருந்து செம்மண் கடத்தப்பட்டு, அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

செம்மண் கடத்தல் தொடர்பாக பழனி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும், அதனை கண்டும் காணாமல் இருப்பது அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கூறும்போது,
பெரியம்மாபட்டி பகுதியானது மலையடிவார பகுதிகளாகும். இப்பகுதியிலிருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் செம்மண் எடுத்துச்சென்று வேறுசில பகுதிகளில் பதுக்கி வைத்து அங்கிருந்து செம்மண் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாக JCB, Hitachi, டிப்பர் லாரிகளில் செம்மண் திருட்டு நடைபெற்று வருகிறது. அரசுக்கு சொந்தமான உபரி நிலங்களில் செம்மண் எடுக்க அனுமதி வழங்காத நிலையில், சில வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு பட்டா நிலம் என பொய்யான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, மண் திருடும் மாபியா கும்பல்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் செம்மண் எடுத்து செல்கின்றனர். அந்த நிலமானது ஏழை மக்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலம். அந்த இடத்தை அபகரித்து, நிலங்களை முழுமையாக தனிநபர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த மண் திருடும் மாபியாக்கள் தாராளமாக செம்மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அதே பகுதியில் கடந்த வாரம் இதேபோல மண் திருடும் சம்பவம் நடந்துள்ளது. அப்போது வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அங்கிருந்த வாகனங்களை பறிமுதல் செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக விட்டு சென்றுள்ளனர்.

02.08.2025 சனிக்கிழமை இன்று காலை முதல் அதே பகுதியில் மீண்டும் சுதந்திரமாக இயந்திரங்களை வைத்து செம்மண் எடுத்துச் செல்கின்றனர். இதுசம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும், அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துவிட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். பழனி அடுத்துள்ள மலையடிவார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் செம்மண் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் மணல் மாஃபியாக்கள் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, செம்மண் திருட்டுக்கு துணை போகும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.