காவேரி டெல்டாவில் குறுவை சாகுபடி நடக்க..
காவிரிப்படுகை போன்ற கால்வாய்ப் பாசன விவசாயம் நடைபெறும் சமவெளி போன்று வேறு எங்கும் இல்லை. 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் இருந்ததில் குறைந்து தற்போது 14 லட்சம் ஏக்கரில் தமிழகத்தின் நெல் உற்பத்தியில் 34 சதவீதம் நடைபெறுகிறது. குடியிருப்புகள் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் நிலக்குவியல்களால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் நான்கு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி ஆறு லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மே31 வரை தூர்வாரும் பணிகள் ஆறுகளைத் தவிர ஏ.பி.சி.டி, பிரிவு கால்வாய்கள் தூர்வாரப்படும் நிலையில் ஆறுகளின் மூலம் காவிரிப்படுகையில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரி போன்ற ஏரிகளில் நீர் நிரப்பச் செய்யலாம். கடைமடை பகுதிகளில் ஒன்றான பேராவூரணி பகுதியில் உள்ள ஏரிகள் வரை நீர் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறை முயற்சிக்க வேண்டும். 683 தூர் வாரும் பணிகள் நடப்பு ஆண்டில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4964.11 கிலோமீட்டர் நீளத்திற்கு 683 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளாண்மைத் துறை மூலம் முதன்முதலாக சி. டி கால்வாய்களை தூர்வாரிட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் ஐந்து கோடி மதிப்பீட்டில் 1580 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் தூர்வாரப்பட உள்ளது. கடந்த காலங்களில் தூர்வாரும் பணிகள் முழுமை பெறாமல் உள்ள நிலையில், இவ்வாண்டும் தூர்வாரும் பணிகள் முடியுமா.? என தெரியவில்லை.
விதைகள் பற்றாக்குறை இல்லாமல் இருக்க…
குறுகிய கால விதை இரகங்கள், 80 சதவீத உழைப்புத்திறன், 98 சதவீத புறத்தூய்மையில், 13 சதவீதமுள்ள ஈரப்பதம் உள்ள விதைகள் வேளாண்மைத்துறை மற்றும் தனியார் கடைகள் மூலம் 3675 மெட்ரிக் டன் விதை இருப்பு உள்ளதாக தமிழக அரசு வேளாண் துறை செயலாளர் அறிவித்திருக்கிறார். முன்பட்ட குறுவைச் சாகுபடி போக இன்னும் ஐந்து லட்சம் ஏக்கர் சாகுபடி செய்திட விவசாயிகளிடம் விதை கையிருப்பு இல்லாத நிலையில் அரசின் அறிவிப்பில் 7.5 கிலோ மட்டுமே ஏக்கருக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது நடைமுறையில் ஏக்கருக்கு 30 கிலோ தேவைப்படும் நிலையில் 15,000 டன் விதை தேவைப்படுகிறது. விதை பற்றாக்குறை ஏற்பட்டால் தரமற்ற விதைகள் சந்தையில் விற்பனையாகாமல் ஆய்வு செய்யவும், விதை நெல்லின் விலையை செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதையும் தடுத்திட வேண்டும். பற்றாக்குறை விதைகளை அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
விவசாய கடன்கள்:
4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 180 தொடக்க கூட்டுறவு வேளாண் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கிற அனைவருக்கும் கடன் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும், 48,84,726 மொத்த நகைக் கடனாளிகளில் 10,12,000 பேர் மட்டுமே தள்ளுபடி பயனாளிகளாக உள்ளனர். மீதமுள்ள 38 லட்சத்திற்கும் மேற்பட்ட நகைக் கடனாளிகள்மற்றும் எம்டிசி எனும் ஒத்திவைப்பு கடனாளிகள் கடன் பெற தகுதியற்றவர்களாக உள்ளனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுக முடியாத நிலையில் கந்துவட்டிக் கும்பலிடம் விவசாயிகள் சிக்கும் நிலை ஏற்படக்கூடும். இது குறித்து மாநில அரசு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கிட வேண்டும். கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வழங்க மத்திய அரசு வழிகாட்டுதல்களில் இதுவரையி நாடு முழுவதும் வெறும் ஆறு கோடியே அறுபத்தியேழு லட்சம் விவசாயிகளுக்கு மட்டுபே கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கும் பணி இன்னும் முழுமை பெறாத நிலையில் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்கிற அச்சம் போக்கப்பட வேண்டும்.
உரம்:
தமிழ்நாட்டில் 750 மொத்த உரக்கடைகள், 11548 கூட்டுறவு, தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதையும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கவும், தனியார் பதுக்கலை தடுத்திடவும், அரசு முயற்சிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி), இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு அமைப்பு, 15,000 கிராமப்பஞ்சாயத்துகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி, உரம், விதை தெளிப்பு பயன்பாட்டிற்கு வரும் என்பதோடு, இவ்வாண்டு ஒரு லட்சம் ட்ரோன் பயன்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக எம்.ஐ.டி. இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பயிர்க் காப்பீடு
கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்ய முடியாத நிலையில், பயிர்க்காப்பீடு செலுத்தாத நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை உடன் தேர்வு செய்ய வேண்டிய, அவசரக்கடமை மாநில அரசிற்கு உள்ளது. இவ்வாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,339 கோடி ரூபாய் ஒதுக்கீட்டை கேர்ள அரசு போல் அரசு நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தலாமா என்று சிந்திக்க வேண்டும்.
குறைந்த பட்ச ஆதாரவிலை
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை திரும்பப்பெற குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குவோம் என்று ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், தற்போது வரை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக சன்னரகத்திற்கு குவிண்டால் 1960 உடன் மாநில அரசின் ரூ.100 ஊக்கத்தொகையுடன் ரூபாய் இரண்டாயிரத்து அறுபதும் பொது இரகத்திற்கு ஆதார விலையான ரூபாய் 1940 உடன் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூபாய் 75 சேர்த்து ரூ.2015ம் பெறுகின்றனர். இடுபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தற்போது வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ள ஊக்கத்தொகையை விட கூடுதலாக ரூபாய் 1500 கோடி ஒதுக்கீடு செய்வதன் மூலம் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 விலை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். கேரளாவில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2820 விலையை மாநில அரசு தான் உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு காவிரிப்படுகையில் 26 லட்சம் மெட்ரிக் டன் நெல் 17 சதவீத ஈரப்பதத்தில் கொள்முதல் செய்யப்பட்டதில் போதுமான நெல் சேமிப்புக் கிடங்கு இல்லாமல் கொள்முதல் செய்த நெல் பாதுகாக்கவும் சேமிக்கவும் முடியாமல் மழையில் நனைந்து முளைத்தும் வெயிலில் காய்ந்தும் தரமற்ற அரிசியாகும் நிலையும் உள்ளது. மாவட்டத்தின் நெல் சேமிப்புக் கிடங்குகளில் 25 சதவீதம் நெல்லை இருப்பு வைக்கலாம் என்கிற விதி இருந்தாலும். திருவாரூரில் 30கோடியே 30லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் கிடங்குகள், உலர் களங்கள் போல, அனைத்து காவிரிப்படுகை. மாவட்டங்களிலும் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
– கே.எஸ்.இராதா கிருஷணன்