அரசியல்

அண்ணாமலையை எச்சரிக்கும் அதிமுக..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரையை தரக்குறைவாக பேசியதற்காக அண்ணாமலையை சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்து பேசினார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் அதிமுக – பாஜக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவத்தை மோடி கொடுத்து வருகிறார். அதிமுக துணை இல்லாமல் தன்னால் பிரதமர் ஆக முடியாது என்பதை மோடி உணர்ந்திருக்கிறார்.

ஆனால் மோடியின் கனவை கலைக்கும் விதமாக அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மோடி ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அண்ணாமலைக்கு துளியும் இல்லை. மோடி வெற்றி பெற வேண்டும் என்றால் இங்கு நீங்கள் அதிமுகவை ஆதரித்து பேச வேண்டும் ஆனால் அதற்கு மாறாக, அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. அம்மாவை (ஜெயலலிதா) விமர்சிக்கிறார். அண்ணாதுரையை விமர்சிக்கிறார். அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன? யாருக்கு நீங்கள் மறைமுகமாக உதவுகிறீர்கள்?

உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். அண்ணாமலை அவர்களே, இனியும் எங்களை சீண்டாதீர்கள். அண்ணாதுரை இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது.. இப்போது அவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கு. அண்ணாமலை ஒரு பாதயாத்திரை போயிட்டு இருக்காரு. ஆனா யாருமே அதை கண்டுக்கல.

அதனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையை போல அண்ணாமலை கத்திகிட்டு இருக்காரு. நான் ஒருத்தன் இங்கே இருக்கன்டா, நானும் ரவுடிதான் டா என கத்திட்டு இருக்காரு. உன் இருப்பை காட்டிக் கொள்ள எங்கள் தலைவர்களை இழிவுப்படுத்துவியா நீ? இத்தோடு அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திக்கோங்க. இல்லையென்றால் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என சி.வி. சண்முகம் பேசினார்.

கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது அவர், 1956-இல் நடந்ததாக ஒரு விஷயத்தை கூறினார்.

அதாவது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தமிழ் மாநாட்டில் மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினாராம். அப்போது கடவுளை கிண்டல் செய்து அவர் பேசியதால் பார்வார்டு ப்ளாக் கட்சி தலைவர் முத்துராமலிங்க தேவர் கடும் கோபம் அடைந்தாராம். பின்னர் அடுத்த நாள் அந்த மாநாட்டில் பேசிய முத்துராமலிங்க தேவர், “இனி யாராவது கடவுளை கேலி செய்தால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தில் அபிஷேகம் நடக்கும்“ என எச்சரித்தாராம்.

இதனால் முத்துராமலிங்க தேவருக்கு பயந்து மதுரையில் ஒளிந்த அண்ணாதுரை, பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டு சென்னைக்கு ஓடி வந்ததாக ஒரு கதையை கூறினார் அண்ணாமலை. இதுதான் தற்போது அதிமுகவினரை கொந்தளிக்க செய்திருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று கூறிய நிலையில், தற்போது அண்ணாவையும் அவமரியாதையாக பேசுகிறாரே என்று அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசும் போது அண்ணாமலையை பெயர் சொல்லாமல் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:

ஒருத்தன் பித்துப்பிடிச்ச மாதிரி பேசுறான்.. இறந்து போன தலைவர்களை இழிவாக பேசுபவன் கண்டிப்பாக இழிபிறவி தான். இன்னைக்கு நாங்க டாக்டர் கலைஞர்னு தான் சொல்றோம். அவர் உயிரோட இருந்தவரை திட்டினோரம். இப்போது அவர் இறந்துவிட்டார் என்பதால் அவருக்கு மரியாதை கொடுத்து பேசுகிறோம். இதுதான் அரசியல் நாகரீகம். மறைந்த தலைவர்களை மதிக்காதவனை இந்த தமிழ் சமுதாயம் மிதிக்கத்தான் செய்யும்.

அரசியலில் நீ எங்கேயோ இருக்கலாம். ஆளுங்கட்சி என்கிற திமிர்ல இருக்கலாம். அண்ணாவை பற்றி யார் தவறாக பேசினாலும் சரி. அவன் நாக்கு துண்டாக்கப்படும். அப்படிப்பட்ட ஆளுங்கதான் இங்கே இருக்கிறோம் எல்லாம் கொள்கை மறவர்கள். அண்ணா மட்டும் கட்சி தொடங்காமல் இருந்தால் இன்னைக்கு குப்பனும் சுப்பனும் அமைச்சர் ஆகியிருக்க முடியுமா? சாதாரண ஆட்கள் கவுன்சிலராகவும், மேயராகவும் ஆகியிருக்க முடியுமா? அப்படிப்பட்ட சாதனையை புரிந்தவர்டா அண்ணா. ஏன்டா டேய்.. அவரை பற்றி இழிவா பேசுறியே டேய். உன் நாக்கு அழுகிப் போகும்டா. இவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.

சனாதனத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், எச். ராஜா தலைமையில் திருச்சியில் போராட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசிய எச். ராஜா, சம்பந்தமே இல்லாமல் பெரியாரை இழிவுப்படுத்தி பேசினார். ஒரு புத்தகத்தை எடுத்து வந்த எச். ராஜா, அதில் பெரியார் எப்போதுமே விலைமாதர் வீட்டில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: ஒரு விஷயம் என்னை மனதார வேதனைப்படுத்தியது. எனக்கு அந்த ஆளை பத்தியெல்லாம் பேசவே பிடிக்கவில்லை. ஆனால் அவரது தரக்குறைவான பேச்சு எல்லையை மீறி போகிறது. அந்த ஆளு பேரு எச்.ராஜா. தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை கன்னாபின்னானு பேசிட்டு இருக்கார். யாரோ ஒருத்தர் எழுதுன புத்தகக்தை வெச்சிட்டு பெரியாரை கேவலமாக பேசி இருக்கிறார். தந்தை பெரியார் எங்களுக்கு கொடுத்துட்டு போனது சுயமரியாதை மாத்திரம் இல்லை ராஜா.. புரிஞ்சுக்கோ. பெரியாரையும், அண்ணாவையும் கேவலமாக பேசிட்டு தமிழ்நாட்டுல உலா வரணும்னு நினைச்சா நீ வீணா போயிருவ என புகழேந்தி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button