தமிழகம்

எட்டு வயது பெண் குழந்தை கொலை… போலி ஆவணங்களுடன் இரண்டாவது திருமணம்..! : கைது செய்யப்படாத மர்மம் என்ன..?

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பொறியாளர் மணிகண்டன் என்பவர் முதல் திருமணத்தை மறைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து இரண்டாவது திருமணம் செய்ததுடன், இரண்டாவது மனைவியின் எட்டு வயது பெண் குழந்தையை கொலை செய்துள்ளதாக முதல் மனைவியின் பெற்றோர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி துங்கா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகள் சுந்தரம் மீனாட்சிக்கும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மணிகண்டனுக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. பின்னர் மணிகண்டனும், சுந்தரம் மீனாட்சியும் அம்பத்தூரில் வசித்து வந்துள்ளனர். அதன்பிறகு மாடம்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை தூத்துக்குடியில் சுந்தரம் மீனாட்சியின் பெற்றோர் விமரிசையாக நடத்தியுள்ளனர்.

முன்னதாக ஈரோட்டைச் சேர்ந்த தாராதேவி என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். தாராதேவிக்கு ஏற்கனவே திருமணமாகி எட்டுவயதில் அனுஸ்ரீ என்கிற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தான் மணிகண்டனுக்கும், சுந்தரம் மீனாட்சிக்கும் திருமணம் நடந்துள்ளது. மணிகண்டன் தனக்கு திருமணம் ஆனதை தாராதேவியிடம் கூறாமல் மறைத்து அடிக்கடி இருவரும் தனிமையில் கணவன் மனைவியாக இருந்துள்ளனர். தாராதேவியும், தனது கணவர் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் சென்னை, ஈரோடு என மணிகண்டனுடன் சுற்றியுள்ளதாக கூறுகிறார்கள். அப்போது தனது மகள் அனுஸ்ரீயையும் கூட்டி வந்துள்ளார்.

பின்னர் மணிகண்டன், தாராதேவி காதல் நெருக்கமானதும் முதல் மனைவி சுந்தரம் மீனாட்சியை சண்டையிட்டு வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மணிகண்டனின் சித்ரவதை தாங்கமுடியாத சுந்தரம் மீனாட்சி அவரது பெற்றோர் வீட்டிற்கு தனது மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அதன்பிறகு சுந்தரம் மீனாட்சியுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு தாராதேவியுடன் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார். அவரது பெற்றோர் அம்பத்தூர் அருள்நகரில் வசித்துவரும் நிலையில் இவர் பல்லாவரம், புழல் பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தாராதேவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடன் ராஜேந்திரன் – தாராதேவி தம்பதியினருக்கு பிறந்த அனுஸ்ரீயும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

தாராதேவிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து, அவரை காதலிப்பதாகவும், அவர் பெரிய தொழிலதிபரின் மகள் எனவும் தனது குடும்பத்தினருடன் போனில் பேச வைத்துள்ளார் மணிகண்டன். அவரது பெற்றோரும் தன் மகன் நன்றாக இருக்கட்டும் என நினைத்து இவருக்கு திருமணம் ஆனதை தாராதேவியிடம் மறைத்துள்ளனர். பின்னர் உனக்கு இரண்டாவது திருமணம், எனக்கு முதல் திருமணம் என கூறியதோடு, எனது பெற்றோருக்கு உனக்கு குழந்தை இருப்பது தெரிய வேண்டாம் என கூறியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமானால் அனுஸ்ரீ இருக்கக் கூடாது என முடிவெடுத்து அந்தக் குழந்தையை கொல்ல முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களது திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனுஸ்ரீக்கு சாப்பாட்டில் எதையோ கலந்து கொடுத்து, குழந்தை மயக்கம் அடைந்ததும் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தனது முதல் கணவர் ராஜேந்திரனையும் மருத்துவமனைக்கு வரவைத்திருக்கிறார் தாராதேவி. பின்னர் அனுஸ்ரீ உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்கு பெங்களூர் அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் கூறினார்களாம். பணம் செலவு செய்து குழந்தையை காப்பாற்ற துடித்திருக்கிறார் அனுஸ்ரீயின் தந்தை ராஜேந்திரன். ஆனால் பத்துமாதம் வயிற்றில் சுமந்த தாய் தனது காதலன் மணிகண்டனுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக உன் குழந்தையை நீயே காப்பாற்றி வளர்த்துக்க எனக்கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி அனுஸ்ரீ மரணமடைந்துள்ளார்.

தாராதேவியின் குழந்தை இறந்து மூன்றாவது நாள் ஏப்ரல் 19 ஆம் தேதி மணிகண்டனம், தாராதேவியும் பாஸ்போர்ட் வாங்கியுள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து முதல் மனைவி என தாராதேவியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் மணிகண்டன். பின்னர் ஏப்ரல் 28ஆம் தேதி விசா வாங்கிக் கொண்டு, 30ஆம் தேதி இருவரும் அயர்லாந்து சென்றுள்ளனர். பின்னர் அயர்லாந்தில் 30 நாட்களுக்கு மேல் மணிகண்டனும், தாராதேவியும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளனர். அதன்பிறகு முதல் கணவர் ராஜேந்திரன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஜூன் 8 ஆம் தேதி ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் தாராதேவி. அதன்பிறகு டிசம்பர் 2017ல் தனது முதல்கணவர் ராஜேந்திரனிடம் விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மணிகண்டனும், தாராதேவியும் ஈரோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் வழங்கிய ஆவணங்களில் மணிகண்டன் தனக்கு முதல் திருமணம் என போலியான வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பிறகு அம்பத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் 2018 மார்ச் 1ல் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் மணிகண்டனின் பெற்றோர் சம்மதத்துடன் நடந்துள்ளது. தாராதேவி பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண் என நினைத்து மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, மகனின் சதிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

பின்னர் மணிகண்டன் தாராதேவியை பதிவுத் திருமணம் செய்து கொண்ட தகவல் ஏழுமாதங்களுக்குப் பிறகு மணிகண்டனின் முதல் மனைவியான சுந்தரம் மீனாட்சி குடும்பத்தினருக்குத் தெரியவர 13.09.2018 அன்று காவல்துறையின் அவசர அழைப்பு எண் 100ல் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் மணிகண்டன் வெளிநாட்டில் இருப்பதாகவும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் மணிகண்டனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புலம்புகிறார்கள்.

மணிகண்டன் தனது முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது, அவரிடம் முறையாக விவாகரத்து வாங்காமல் போலியான ஆவணங்கள் தயாரித்து தனது மனைவி தாராதேவி என பாஸ்போர்ட் பெற்றதோடு, முதல் திருமணத்தை மறைத்து தாராதேவி தான் முதல் மனைவி என பதிவுத் திருமணமும் செய்துள்ளார். மணிகண்டன் செய்த தவறுகளுக்கு ஆதாரமாக 300 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை ஆதாரங்களாக கொடுத்தும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மணிகண்டன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுந்தரம் மீனாட்சியின் பெற்றோர் தங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்து கதறி அழுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், தனது மகள் இளம் வயதில் கணவனால் கைவிடப்பட்டு, புத்தி சுவாதீனம் இல்லாத தனது மகனை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் நாங்கள் நரக வேதனையை அனுபவிக்கிறோம். மணிகண்டன் செய்த தவறுகளால் இளம் வயதான எங்கள் மகள் சுந்தரம் மீனாட்சி, அவரது மகன் இருவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது. சட்டப்படி தவறு செய்த மணிகண்டனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button