பல்லடம் அருகே நிலக்கரி சுரங்கம் ! உறக்கத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் !

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்காவில், கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுப்பட்டி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் திடீரென பூமி உள்வாங்கியது போல், கோடிக்கணக்கான மதிப்பில் கிராவல் மண் காணாமல் போயுள்ளது.

மேலும் குறிப்பிட்ட ஆழத்திற்கு பிறகு கருப்பு நிறத்தில் வெட்டி எடுக்கப்பட்டுள்ள பாறைத்துகள்கள், நிலக்கரி கல் போல் காட்சி அளிக்கிறது. இதுவரை எந்த ஒரு இடத்திலும் சட்டவிரோதமாக மண் அள்ளப்படும்போது, கருப்பு நிறத்தில் மண் காணப்பட்டதில்லை. இந்த அதிசய நிகழ்வினை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளவேண்டிய கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் துறை வரையுள்ள அதிகாரிகள் உறக்கத்தை கலைத்து உண்மையை கண்டறிய வேண்டும். குளம், குட்டைகளை தூர்வாரி வநத நிலையில், தற்போது மண் வளம் மறைந்து நிலக்கரி கிடைக்க ஆரம்பித்திருக்கிறதா ? அல்லது மண் தன்மை விஷமாக மாறியுள்ளதா ? என மண் பரிசோதனை மூலம் வருவாய் துறை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் மண் அள்ளப்பட்ட குட்டைக்கு மிக அருகிலேயே அதிக மின் அழுத்த பவர்லைன் செல்வதால் ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது. திடீரென பல்லடத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையின் இருபுறமும், சட்டவிரோத மண் அள்ளும் கும்பல் ரகசியமாக வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.