மாவட்டம்

பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !

திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை ஆறுபடை வீடுகளில் முக்கிய பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச நாளன்று மலை திருத்தேரோட்டம், இரவு 7 மணியளவில் தெப்பத்தேரோட்டம் என பழனி திருவிழா கோலமாக காட்சியளித்தது. விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முருகனை தரிசிக்க பழனிக்கு பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள், திண்டுக்கல், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக, முருகனை தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியும், பாட்டு பாடியும் ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர்.

முருகனை தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கிரிவீதி பாதையில் நிழற்பந்தல் அமைத்து அதன் வழியாக மலைக்கோவில் செல்ல சிறப்பு வழிப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களை நிறுத்தி வைத்து, கூட்டத்தை போலீசார் கட்டுப்பாடாக தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர். இதனால் தரிசனத்துக்கு பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் பலர் அபாயகரமான வகையில் சுவர் ஏறி குதித்து குறுக்கு வழியில் மலைமீது ஏறிச்சென்றனர்.

அத்துடன் தைப்பூச நாளன்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். குழந்தைகளுக்கு கரும்பு தொட்டிலில் வைத்தும், பெண்கள் பால் காவடி எடுத்தும், சிறுவர்கள் மேள தாளத்துக்கு ஏற்ப மயில் காவடியில் ஆடிப்பாடியும் கிரிவலம் வந்தனர். பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பழனியாண்டவர் கல்லூரி, கொடைக்கானல் ரோடு ஆகிய இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் போதுமான கழிப்பிட வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஆனால், பழனி மலைக்கு வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு  சிற்றுண்டி பைகளை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button