நிலம் சம்மந்தமான முன்விரோதம் ! கலவர பூமியான மடத்துக்குளம் ! பதட்டத்தில் பொதுமக்கள் !

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையம் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் ( சீலிங் லேண்ட் ) உபரி நிலங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் சுமார் 13 ஏக்கர் நிலத்தை கடந்த 2002 ஆம் ஆண்டு அரசு சார்பில் அருந்ததியினர் மக்களான லட்சுமி, முருகன், வேலன் உள்ளிட்ட பலருக்கு பட்டா வழங்கியுள்ளனர். இந்த நிலத்தினை 20 ஆண்டுகள் முடிந்த பிறகு விற்பனை செய்ய நிலத்தின் உரிமையாளர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

அந்த நிலத்தை உடுமலை அடுத்துள்ள ஜல்லி பட்டி பகுதியை சேர்ந்த முருகன், கோபிநாத் ஆகிய இருவரும் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சிவ தர்ஷினி பேப்பர் மில் உரிமையாளரின் வளர்ப்பு மகன் அஸ்வின் என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. பின்னர் இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோட்டத்தை ட்ரோன் மூலமாக புகைப்படம் எடுத்ததாக கூறி அஸ்வின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குத்தகைதாரர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் சரக்கு, பிரியாணி என கூலிக்கு அடியாட்களை ஈச்சர் மற்றும் பிக்கப் வாகனங்களில் அஸ்வின் அழைத்து வந்துள்ளார். அதில் சில கல்லூரி மாணவர்கள், தனியார் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ஜிம் இளைஞர்கள், கட்டிட வேலைக்கு செல்லும் பெண்கள், சமையல் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலர் நள்ளிரவு 1 மணியளவில் தோட்டத்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டை சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும் தோட்டத்தில் காவல் பணியில் இருந்த இருவரை கட்டிவைத்து அடித்து நிர்வாணப்படுத்தியும், வாயில் சிறுநீர் கழித்தும் துன்புறுத்தியுள்ளனர். தோட்டத்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ஆவணங்களையும், கூலி ஆட்களுக்கு வைத்திருந்த ரூபாய் 50,000/- ஆயிரம் பணத்தையும், எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் ருத்ராபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான நபர்கள் அடிதடியில் ஈடுபட்டதால் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஒன்று கூடியுள்ளனர். அப்போது கலவரத்தில் ஈடுபட்ட சிலரை அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் கோபிநாத் ஆதாரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்து சிலர் தப்பியோடி உள்ளனர். இதில், உடுமலையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜித்தேஷ், மணிகண்டன் ஆகிய இளைஞர்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஜித்தேஷ் என்ற கல்லூரி மாணவர் மட்டும் ஆற்றில் நீந்தி கரையேறியுள்ளார். மற்றொரு நபர் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொமரலிங்கம் காவல் ஆய்வாளர் பஞ்சலட்சுமி, மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் அருள் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஆற்றில் குதித்த இளைஞரை தீயணைப்பு துறையினர் உதவியுடன், கடந்த ஐந்து நாட்களாக அமராவதி ஆற்றில் தேடி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் எதிர் தரப்பில் தாக்குதல் நடத்திய 15க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறை மற்றும் உடுமலை கிளை சிறையிலும் அடைத்ததுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை அமராவதி ஆற்றங்கரையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர். அப்போது அந்த ஆண் சடலமானது ஆற்றில் குதித்த உடுமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் மணிகண்டன் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து சடலத்தை உடற்கூறாய்வு செய்ய திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வரும் அஸ்வின் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ருத்ராபளையம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நூற்றுக்கணக்கான நபர்கள் திரண்டதால் மடத்துக்குளம் வட்டாரமே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.




