சுகாதாரத்துறையின் அலட்சியம்: 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு
தமிழக அரசும், ஆண்டுதோறும் மருத்துவதுறைக்காக கணிசமாக நிதி ஒதுக்குகிறது. எல்லா பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தநிலையில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளால் உங்களைத்தானே நம்பிவந்தோம், இந்தநிலை ஏற்பட்டுவிட்டதே என்று கதற வைக்கிறது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட ஒருபெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் கிருமிகள் கலந்த ரத்தத்தை ஏற்றியதால் ஒன்றும் அறியாத அந்த அப்பாவிபெண் இப்போது எய்ட்ஸ் நோயாளியாகிவிட்டார். அவரது வாழ்க்கையே பெரும்பாதிப்புக்குள்ளாகிவிட்டது. நல்லவேளையாக அந்தப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படவில்லை. அடுத்ததாக, கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 20 வயது பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும்போது, தலை மட்டும் துண்டாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இப்போது அதைவிட மற்றொரு கொடிய தகவல் வெளிவந்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வந்த 15 கர்ப்பிணி பெண்களுக்கு தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சரியாக பராமரிக்காத கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்தபெண்கள் உயிர் இழந்ததாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுவாக ரத்த வங்கிகளில் ரத்தத்தை பராமரிக்கும்போது, 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உள்ள சிறப்பு குளிர்பதனப்பெட்டியில் வைத்து 24 மணிநேரமும் பராமரிக்கவேண்டும். இடையில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக ஜெனரேட்டர் தானாக இயங்கத்தொடங்கி அதேகுளுமை பராமரிப்பில் வைக்கவேண்டும்.
ஒருவருக்கு ரத்தம் ஏற்றும் முன்போ அல்லது சோதனை செய்யும்போதோ, அது நல்ல ரத்தமா? அல்லது கெட்ட ரத்தமா? என்று பார்த்தவுடனேயே டாக்டர்களுக்கு தெரிந்துவிடும். ஆனால், இந்த 3 அரசு மருத்துவமனைகளிலும் பொறுப்பான டாக்டர்கள், நர்சுகள், ரத்தவங்கி தொழில்நுட்ப பணியாளர்கள் இருந்தும், யாரும் அதைசரியாக பரிசோதிக்காததால், இவர்கள் செய்த தவறினால் 15 கர்ப்பிணிப் பெண்களும், அவர்கள் வயிற்றில் இருந்த குழந்தைகளும் உயிர் இழந்திருந்தால் அந்த உயிர் இழப்புகளுக்கும், சாத்தூர் பெண்ணை எய்ட்ஸ் நோயாளியாக்கியதற்கும் முழுக்கமுழுக்க சுகாதாரத்துறைதான் பொறுப்பு. அரசு மருத்துவமனைகள்தான் பொறுப்பு. சாத்தூர் சம்பவத்தைதொடர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரத்தவங்கி பணியாளர்களுக்கும் கடந்தவாரம் முதல் 2 நாள் புத்தாக்க பயிற்சியை மருத்துவத்துறை தொடங்கியுள்ளது. இப்போது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ரத்தவங்கிகளை கையாளும் நர்சுகள், டாக்டர்கள் எல்லோருக்குமே ரத்தத்தை பராமரிப்பது தொடர்பாக புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவேண்டும். அரசு மருத்துவமனைகளை பொறுத்தமட்டில், சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை மருத்துவமனைகளில் இருப்பதுபோன்ற நவீன சாதனங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட, தாலுகா, ஆரம்பசுகாதார நிலையங்களில் வைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும். அரசு மருத்துவமனைகளில் கவனகுறைவாகவோ, பரிசோதனை, சிகிச்சை குறைகளாலோ ஒரு உயிர்கூட இறப்பு ஏற்படக்கூடாது. சென்னை மக்களுக்கு கிடைக்கும் மருத்துவசிகிச்சை, மருத்துவபரிசோதனைகள், சாதாரண குக்கிராமங்களிலுள்ள மக்களுக்கும் கிடைக்கிறது என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.