அரசியல்

தமிழகத்தில் மத மோதலை தூண்டுகிறதா? பாஜக..!

சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டார். அதோடு, சனாதனம் சமத்துவத்துக்கு எதிரானது என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் அதிரடியாகப் பேசினார். உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு பக்கம் எழ, பா.ஜ.க-வோ இந்த விவகாரத்தை தனக்குச் சாதகமாக மாற்றி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்திருக்கும் I.N.D.I.A கூட்டணிக்குள், தேன்கூட்டில் கல் எரிவதுபோல் காய்களை நகர்த்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, “சுவாமி விவேகானந்தர், லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த ‘சனாதன தர்மத்தை’ I.N.D.I.A கூட்டணி அழிக்க நினைக்கிறது.

இன்று வெளிப்படையாகவே சனாதனத்தைக் குறிவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளை நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள். நாடு முழுவதுமுள்ள அனைத்து ‘சனாதனிகளும், நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இதுவரை தனது அமைச்சரவையிலுள்ள சகாக்கள், நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க தலைவர்களை எதிர்வினையாற்ற அறிவுரை வழங்கிய மோடி, இன்று தானும் அதில் இணைந்திருக்கிறார்.

நிலைமை இவ்வாறு இருக்க, சனாதன சர்ச்சைக் குறித்து ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், “தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தை முன்வைத்து, I.N.D.I.A கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்கிறார் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியுமா. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்குவதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இதற்காகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பா.ஜ.க-வின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவி செயல்படுத்துகிறார்.

ஓர் ஆளுநர் எப்படி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட முடியும். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அங்கே மத அடிப்படையில் குழப்பத்தை உருவாக்கத்தானே ஆளுநர் ரவியை அனுப்பிவைத்தீர்கள். நீங்கள்தான் குற்றவாளிகள்.

தமிழ்நாட்டில் இருப்பவர்களை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விஷ வித்துகளை விதைத்து அனுப்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத அரசியல், மத மோதல் அரசியல் ஆகியவை இல்லை. தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க பா.ஜ.க முயல்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சமீபகாலமாகவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் ஆளுநருக்குமிடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசு தயாரித்த, ஆளுநர் உரையை மாற்றி வாசித்தது முதல் செந்தில் பாலாஜி விவகாரம் வரை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் ஏழாம்பொருத்தம்தான். அதேபோல, கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் பிரச்னை நீடித்து வருகிறது. தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளிப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டு இருக்கிறது.

தமிழக அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள், “மற்ற மாநிலங்களில் எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொள்கைரீதியாகவும் தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுத்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் குறித்தும், அதன் பெருமைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார். அப்படியிருக்க, இப்போது அதற்கு தி.மு.க-வும் பதிலடி கொடுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில்தான் தமிழ்நாட்டின் அரசியல் தட்ப வெப்பம் அறிந்து கபில் சிபல் தன் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

எனவே, இந்த விவகாரத்தை இரு தரப்பும் கவனமாகக் கையாளவில்லையென்றால், கபில் சிபல் எச்சரித்திருப்பதுபோல் தமிழ்நாட்டில் மதக்கலவரம் உருவாக வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

கபல் சிபல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விமர்சித்திருக்கும் அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை ஆளுநர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ விவகாரம் பேசுபொருளிலேயே இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button