வடிபால் ஊக்கத்தொகை வழங்காததால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..! : பால் உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமா தமிழக அரசு..?
வடிபால் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் சங்கங்களுக்கு பால் அளிக்க கறவை பசுமாடு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் 32 கிராமங்களில் கறவை மாடு உரிமையாளர்களிடம் இருந்து காலை, மாலை என இருவேளைகளில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவர்களுக்கு ஆண்டுதோறும் வடிகால் ஊக்கத்தொகை ரூபாய் 5000 முதல் 10,000 வரை வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான வடிபால் ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தில் உள்ள கறவை மாடு உரிமையாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பால் தரமறுத்துள்ளனர். இதனால் பசும்பால் வாங்க வந்த பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.
இது சம்பந்தமாக பரமக்குடி தாலுகா கீழப்பெருங்கரை கிரம பால் உற்பத்தியாளர்கள் சார்பில் சங்குசேகரன் என்பவர் நம்மிடம் பேசுகையில்… எங்கள் ஊரில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கறவை மாடுகளை வளர்த்து பால் கறந்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து எங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை எங்களுக்கு வழங்க வேண்டிய வடிபால் தொகையை கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான தொகையை பரமக்குடியில் இயங்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் இதுவரை வழங்க வில்லை.கடந்த காலங்களில் பணியாற்றிய மேலாளர்கள் ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு வடிபால் தொகையை வழங்கி வந்தார்கள். ஆனால் தற்போது தீபாவளி முடிந்து பொங்கல் பண்டிகையும் கடந்துவிட்ட நிலையில், தற்போது உள்ள நிர்வாகம் எங்களுக்குத் தர வேண்டிய தொகையை வழங்காமல் தர மறுக்கிறார்கள்.

எங்களுக்குத் தர வேண்டிய தொகையை வழங்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் எங்களை யாரும் கண்டுகொள்ள வில்லை. ஆகையால் அடுத்த கட்டமாக தற்போது ஆட்சிப் பொறுபில் இருக்கும் தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு எங்களது கோரிக்கைகளை கொண்டு செல்ல இருக்கிறோம். ஏழை எளியோரின் ஒரே நம்பிக்கையாகத் திகழும் தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்தார்.
மற்ற மாவட்டங்களில் மாட்டு கொட்டகை, மாடுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை மற்றும் பல உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணை நிர்வாகம் சார்பில் கறவை மாடு உரிமையாளர்களுக்கு எவ்வித உதவித்தொகையும் வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கறவை மாடு உரிமையாளர்கள் சங்கத்திற்கு பால் அளித்தனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டது.
– ராஜா



