பழனி கோவிலுக்கு இலவசமாக பேட்டரி வாகனம் வழங்கிய தனியார் நிறுவனம் !

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவீதியில் இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழனிக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் கிரிவீதி வழியாக பின்வரும் இடங்களுக்கு எளிதாகச் செல்வதற்காக கடந்த 08.03.2024 முதல் கட்டணமில்லா போக்குவரத்து வசதி செய்யப்பட்டு வருகிறது.
மின் இழுவை ரயில் நிலையம் (Winch), படிப்பாதை கம்பிவட ஊர்தி நிலையம் (Rope Car), சுற்றுலா பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் சென்றுவர பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தம் 37 மின்கல ஊர்திகள் இயக்கப்பட்டு வந்தன.
அதாவது 11 இருக்கைகள் கொண்ட பேட்டரி கார்கள்: 16, 23 இருக்கைகள் கொண்ட மினி பஸ்கள்: 20, 14 இருக்கைகள் கொண்ட மினி பஸ்: 01,

26.4.2026 முதல் பக்தர்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சக்தி முருகன் கம்பெனி சார்பில் அதன் புதுச்சேரி மேனேஜிங் டைரக்டர் வேல்முருகன் மற்றும் எக்ஸிகியூடிவ் டைரக்டர் குகன் ஆகியோர், 23 இருக்கைகள் கொண்ட ஒரு புதிய மின்கல ஊர்தியை திருக்கோயில் நிர்வாகத்திற்கு உபயமாக வழங்கியுள்ளனர். புதிதாக இணைந்துள்ள இந்த வாகனத்தையும் சேர்த்து, தற்போது கிரிவீதியில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயங்கும் மொத்த மின்கல ஊர்திகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி மூலம் கிரிவீதியில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி, கட்டணமில்லாமல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகப் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




