“ஓஹோ எந்தன் பேபி” விமர்சனம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில், ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஓஹோ எந்தன் பேபி”.
கதைப்படி.. சினிமாவில் இயக்குநராகும் கனவோடு உதவி இயக்குநரான ருத்ரா பிரபலமான நாயகன் விஷ்ணு விஷாலிடம் இரண்டு கதைகள் சொல்கிறார். இரண்டு கதைகளும் நாயகனுக்கு திருப்தி இல்லாமல் போனதால் விரக்தியுடன் கிளம்புகிறார். பின்னர் ஒரு காதல் கதை படத்தின் முதல்பாதியாக சொல்ல, அந்தக் கதை நாயகனுக்கு பிடித்து விட, உடனடியாக படத்தை ஆரம்பிக்கலாம் என்கிறார். ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் என்ன எனக் கேட்க, இதுவரை நான் சொன்னது எனது சொந்தக் கதை. அதன்பிறகு எனது காதல் முறிந்து விட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டோம் என்கிறார்.

படத்தின் இரண்டாம் பாகத்தையும் சொந்தமாகக் தான் எழுத வேண்டும். நீங்கள் உங்கள் காதலியை மீண்டும் சந்தித்து பேசுங்கள் என அனுப்பி வைக்கிறார். நாயகனும் தனது காதலியை தேடி மனிபால் செல்கிறார்..
இவர்களின் காதல் கை கூடியதா ? இயக்குநர் ஆகும் கனவு நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…
பள்ளிப் பருவத்தில், இனம் புரியாத வயதில் ஏற்படும் அனுபவங்களை அழகான காதல் உணர்வோடும், கல்லூரியில் ஏற்படும் காதலை எதார்த்தமாக ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தனது மலரும் நினைவுகளை அசைபோடும் அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார்.

நாயகன், நாயகி இருவரும் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். விஷ்ணு விஷால் கதைக்கு ஏற்ப தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பில்டப் இல்லாமல், ஆங்காங்கே தனது சொந்த கதையையும் நகைச்சுயாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி எல்லாப் படத்திலும் தனது ஒரே மாதிரியான வாய்ஸுடன் பேசுவதை மாற்றிக்கொண்டு, படத்திற்கு ஏற்றவாறு புதுவிதமாக மாற்றி யோசித்து இருக்கலாம்.