வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், நயன்தாரா, துனியா விஜய், ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, குஷ்பு, சினேகா உள்ளிட்டோர் நடிப்பில், சந்தர் சி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மூக்குத்தி அம்மன்_2”.
கதைப்படி.. காவலராக பணியாற்றும் நயன்தாரா தனது தாய் ஊர்வசியுடன் வசித்து வருகிறார். தூங்கும் போது குதிரைகள் போருக்குப் போவது, மலைப்பிரதேசம் என தினசரி கனவில் தோன்றுகிறது. அப்போது மைலாஞ்சிக்குப்போ என்கிற குரல் ஒலிக்கிறது. மந்திரவாதி கருடா ராம் குழந்தைகளை நரபலி கொடுத்து பூஜை செய்யும் போது, அவரிடமிருந்து குழந்தையைக் காப்பாற்றி, மைலாஞ்சிக்கு பணியிட மாறுதல் வாங்கிச் செல்கிறார்.

இதற்கிடையில் அரசியல்வாதியான துனியா விஜய் சிறை செல்கிறார். அவரிடம் நவக்கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது பூஜை செய்தால் உலகையே ஆளலாம் என்கிறார் ஒரு சாமியார். அவரும் மைலாஞ்சிக்கு செல்கிறார். பூஜை புனஸ்காரங்கள் முடிந்ததும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதியான ரெஜினா கசாண்ட்ரா உயிர்த்தெழுகிறார். துனியா விஜய்தான் முன்ஜென்ம கணவன் என்பதை உணர்த்தி இருவரும் இணைந்து, தங்கள் மரணத்திற்கு காரணமான நயன்தாராவை தேடுகின்றனர்.

நயன்தாராவை கண்டுபிடித்து தீயசக்திகள் அழித்ததா ? அழிந்ததா ?, நயன்தாராவின் முன்ஜென்ம பின்னனி என்ன ? என்பது மீதிக்கதை..
இயக்குனர் சுந்தர் சி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை தக்கவைக்க தவறிவிட்டார் சுந்தர் சி எனலாம். இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நயன்தாராவின் தொடர் தோல்வி படங்களின் வரிசையில் இந்தப் படம் முதலிடம் பிடிக்கலாம். அவரது கதாப்பாத்திரத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் கதை இல்லையே ! அவர் என்ன செய்வார் ?
படத்தில் பெரும்பாலும் வி எஃப் எக்ஸ், ஏஐ தொழில்நுட்ப காட்சிகள் தான் அதிகம். ஆனால் திரைக்கதையோடு கச்சிதமாக ஒட்டாமல் உள்ளது. கடந்த காலங்களில் அம்மன் சென்டிமென்ட் படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வாழ்வியலோடு கலந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்தப்படம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இசையும் பொருத்தமானதாக அமையவில்லை. மூக்குத்தி அம்மன் தலைப்பிற்கேற்ப இயக்குனரிடம் பக்தி இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.


