விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில், டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரிப்பில், ஏகன், ஶ்ரீ தேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், அதியமான், மைம் கோபி உள்ளிட்டோர் நடிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஹைக்கூ”.
கதைப்படி.. பொறியியல் கல்லூரியில் நண்பர்களுடன் விளையாட்டாக, பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுகிறான் மனோ ( ஏகன் ). பின்னர் வேறோரு கல்லூரியில் சேர்கிறான். அங்கே அவன் மட்டுமே ஆண், மற்ற அனைவரும் பெண்கள். அங்கே பவளக்கொடியை ( ஶ்ரீ தேவி அப்பல்லா ) காதல் கொள்கிறான். பவளக்கொடியின் திருமணம் செய்ய வேண்டுமானால் அந்தஸ்து மற்றும் பணம் தேவை என்பதால் சென்னைக்கு வேலை தேடி செல்கிறான். வேலையின்மை, விரக்தி, பொறுமையின்மை காரணமாக இவர்களது காதல் முறிந்துவிட, பவளக்கொடிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர்.

சில ஆண்டுகள் கழித்து பணிபுரியும் இடத்தில் நிவேதாவும் ( ஃபெமினா ஜார்ஜ் ) மனோவும் காதலிக்கின்றனர். ஆனால் மனோ பவளக்கொடி நினைவாகவே, அவருக்கு பிடித்தது, பிடிக்காதது என மனதில் நினைத்து, நிவேதாவுடன் பழகுவதை நிவேதா உணர்கிறார்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிக்கின்றனர்.
பிரிந்து சென்ற காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

ஏகன் கல்லூரி மாணவராகவும், ஒரு நிறுவனத்தின் முதிர்ச்சியான பணியாளராகவும், எதற்காகவும் நட்பை விட்டுக்கொடுக்காத நண்பனாகவும், காதப்பாத்திமாகவே மாறி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமூகத்தில் நிலவும் ஜாதிய மனநிலை, ஏற்றத்தாழ்வு மனப்பான்மை, சுயமரியாதை உள்ளிட்ட கருத்துக்களோடு, இருவேறு காலகட்டங்களில் நடைபெறும் காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும் தன்னை விரும்புபவர், தனக்காக, தனக்குத் தேவையானதை செய்ய வேண்டும் என அனைத்து பெண்களின் மனநிலையை வெளிப்படுத்திய விதம் அருமை.

ஶ்ரீ தேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதேபோல் அதிர்ச்சி அருண், ( செல்லப்பிராணி ) சிங்கம் இருவரது சென்டிமென்ட் காட்சிகள் சிறப்பு.