திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தினந்தோறும் நுற்றுக்கணக்கானோர் பல்லடம் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு, ஏராளமானோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்படுகின்றனர்.

இந்நிலையில் போதிய வசதிகள் இன்றி இங்கு வரும் நோயாளிகளை கோவை அல்லது திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனிடையே மருத்துவ மனையை மேம்படுத்த, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து செல்ல குறுகலான இடமே உள்ளதால் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு தொழில் நுட்ப அனுமதி தேவையில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக மேலும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு நகர ஊரமைப்பு இயக்குனரகம் சார்பில் தொழில் நுட்ப அனுமதி பெற வேண்டியுள்ளது. கரடி வாவி அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட நிதியை, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கி மேற்படி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர பிரிவு கட்டிடத்தை அமைச்சர் அருண் ராஜ் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக தெரிவித்தனர். மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்கள் பயண்பாட்டிற்காக கட்டப்படும் கட்டுமானத்தின் திட்ட மதிப்பீடு, வரைபடம் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.