வடசென்னையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பல் கைதும், பின்னணியும் !

தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை கடையின் விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநில தொழிலாளர்களிடம் விற்பனை செய்வதை சில கடத்தல் கும்பல் தொழிலாகவே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வடசென்னை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக்கில் உள்ள ரேசன் கடையில் ( எண் : 79 ) இருந்து 300 கிலோ ரேசன் அரிசியை முகமது அலியார் என்பவர் கடத்தி வந்தபோது பிடிபட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், கடையின் விற்பனையாளர் சியாம் மூர்த்தியிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநில தொழிலாளர்களிடம் விற்பனை செய்ய கொண்டு செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் முகமது அலியார், சியாம் மூர்த்தி இருவரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர். முகமது அலியார் மீது ஏற்கனவே இரண்டு அரசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 2250 வழக்குகள் பதிவு செய்து, 526 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 9,52,082 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள், கடத்துலுக்கு பயன்படுத்தப்பட்ட 153 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரும், இந்த திருட்டு கும்பலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், ஆங்காங்கே கடத்தல் சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கிறது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்கிற பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. நேர்மையான அதிகாரிகள், தண்டனைகள் கடுமையாக இருந்தால் ஓரளவுக்கு இந்த திருட்டு கும்பலை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெருவிக்கின்றனர்.
_ கே.எம்.எஸ்




